டெல்லியில் பாஜக அரசு பொறுப்பேற்று சில நாட்களாகி உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் டெல்லி அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில், டெல்லியில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்கதேசத்தினர் ஊடுருவி உள்ளனர் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், டெல்லியில் புதிய பாஜக அரசு பொறுப்பேற்ற நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நடந்த கூட்டத்தில், டெல்லியில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று டெல்லி பாஜக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து, டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்கதேசத்தினர் உள்பட வெளிநாட்டினர் இன்னும் சில நாட்களில் அதிரடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது டெல்லி மாநிலமும் சுத்தம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், மேற்குவங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் வெளியேற்றுவோம் என்று ஏற்கனவே பாஜக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.