திமுகவை துடைத்தெறிவோம்.. அமித்ஷா சவால்.. ஆன்மீகத்தை வைத்து கலவரம் செய்ய நினைத்தால் புடணியில் அடித்து விரட்டுவோம்.. முதல்வர் ஸ்டாலின் பதிலடி.. ரெண்டு பேருமே விஜய்யை கண்டுக்கவே இல்லையே? போட்டி திமுக – அதிமுக பாஜக கூட்டணி இடையில் தானா?

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித்ஷா, குஜராத்தில் இருந்து கொண்டு, “தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை துடைத்தெறிவோம்” என்று சபதம் போட்டிருப்பதும், அதற்கு பதிலடியாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் “கலவரம்…

amitshah

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித்ஷா, குஜராத்தில் இருந்து கொண்டு, “தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை துடைத்தெறிவோம்” என்று சபதம் போட்டிருப்பதும், அதற்கு பதிலடியாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் “கலவரம் செய்ய நினைப்பவர்களை புடணியில் அடித்து விரட்டுங்கள்” என்று ஆவேசமாக பேசியிருப்பதும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து, தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் தனித்தனியே வகுத்துள்ள ரகசிய திட்டங்கள் மற்றும் வியூகங்கள் ஆகியவை தற்போது விவாத பொருளாக மாறியுள்ளன. பீகாரில் கூட்டணி ஆட்சி அமைத்ததை போலவே, தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்திருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு அகமதாபாத்தில் பேசிய அமித்ஷா, “பீகாரில் இரண்டு மடங்கு எம்.எல்.ஏ.க்களை வெற்றிபெற செய்து கூட்டணி ஆட்சி அமைத்தோம். அடுத்து தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை துடைத்தெறிவோம். அங்கும் நம்முடைய கூட்டணி ஆட்சிதான் அமையப்போகிறது” என்று வெளிப்படையாகவே சபதம் போட்டுள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அவர் வகுத்துள்ள முக்கிய வியூகங்களில், வலுவான ஒரு மெகா கூட்டணியை அமைப்பது முதன்மையானது. அ.தி.மு.க. கூட்டணியுடன், அ.ம.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து சேர்க்க டெல்லி தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் போன்றவர்களுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

இந்த கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில், அமித்ஷா விரைவில் தமிழகம் வரவுள்ளார். அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரை அவர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், எதிர்கட்சியின் கூட்டணியை உடைக்கும் முக்கிய வியூகமாக, த.வெ.க. தலைவர் விஜய்யை அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் நடந்து வருகின்றன.

மேலும், தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மீதான ஊழல் புகார்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை மீண்டும் தூசு தட்டி, அவர்களின் கவனத்தை தேர்தல் களத்திலிருந்து திசை திருப்புவதன் மூலமும், தி.மு.க.வுக்கு தலைவலியை கொடுப்பதன் மூலமும் வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்த முடியும் என்று பா.ஜ.க. நம்புகிறது. ஆன்மீகம் தொடர்பான விவகாரங்களை முன்னெடுத்து, தி.மு.க. அரசுக்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைப்பதும் அமித்ஷாவின் மற்றுமொரு முக்கிய வியூகம் ஆகும்.

பா.ஜ.க.வின் இந்த தீவிர திட்டங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கோவையை தொடர்ந்து, மதுரையில் ரூ.3,660 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய ஸ்டாலின், மத்திய அரசை நேரடியாக தாக்கினார். மதுரையில் கலவரம் செய்ய நினைக்கும் யாரையும் “புடணியில் அடித்து விரட்டுங்கள்” என்று உள்ளூர் வட்டார வழக்கில் பேசி, தி.மு.க.வின் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார். மேலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை குறைவான மக்கள் தொகை கொண்ட பாட்னா போன்ற நகரங்களுக்கு மத்திய அரசு வழங்கியதையும், ஆனால் மதுரைக்கு மறுத்ததையும் சுட்டிக்காட்டி, டெல்லிக்கு எதிராக உள்ளூர் அரசியலை மையப்படுத்தினார்.

அமித்ஷா ஆன்மீக விஷயங்களை வைத்து தி.மு.க.வை தாக்கும்போது, அதற்கு பதிலடியாக முதல்வர் ஸ்டாலின், “ஆன்மீகம் என்றால் மன அமைதியையும், மக்களை ஒற்றுமையுடன் இருக்கச் செய்வதும்தான். அரசியல் லாபத்துக்காக செயல்படுவது ஆன்மீகம் அல்ல” என்று விளக்கினார். மேலும், தி.மு.க. ஆட்சியில் 3,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தாங்களே உண்மையான ஆன்மீக பணி செய்பவர்கள் என்று நிரூபிக்க முயன்றார்.

மேலும் மகளிர் உரிமைத் தொகை போன்ற நல திட்டங்களின் பயனாளிகளை அதிகரித்து, பொங்கல் பரிசாக அதிக தொகையை வழங்குவதன் மூலம் பெண் வாக்காளர்களை தக்கவைக்கவும், பா.ஜ.க. அணியை வலுவாக எதிர்கொள்ளவும் தி.மு.க. ரகசியத் திட்டங்களை வகுத்துள்ளது.

ஆக மொத்தம் பாஜக, திமுக ஆகிய இருகட்சிகளுமே விஜய்யை ஒரு பொருட்டாகவோ எதிரியாகவோ கூட நினைக்காமல் அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.