அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. AI171 என்ற அந்த விமானத்தில், 230 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். அவர்களது நிலை என்ன என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம், பிற்பகல் 1:50 மணியளவில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கோடா முகாம் பகுதிக்கு அருகே விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்திலிருந்து கரும்புகை வெளியேறியதை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்தவுடன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் உள்ளிட்ட அவசரக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஏர் இந்தியா விபத்தை அடுத்து விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) இந்த விபத்து குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியாவிடம் இருந்து பயணிகளின் முழுமையான பட்டியலை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. மூத்த அரசு அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த மூத்த மாநில அதிகாரிகள், மீட்புப் பணிகளை கண்காணிக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. “அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் AI171 விமானம், இன்று ஜூன் 12, 2025 அன்று ஒரு சம்பவத்தில் சிக்கியது. இந்த நேரத்தில், நாங்கள் விவரங்களை உறுதிப்படுத்தி வருகிறோம், மேலும் airindia.com மற்றும் எங்கள் X பக்கத்தில் விரைவில் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வோம்,” என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, விரைவில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
