அதிமுக – பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இந்த கூட்டணியில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும், தலைவர்கள் மட்டத்தில் இந்த கூட்டணி உருவானாலும், தொண்டர்கள் மட்டத்தில் இன்னும் இந்த கூட்டணி உருவாகவில்லை என்றும், அதிமுகவினர் பாஜகவினரை எதிரியாகவே பார்ப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. எனவே, தொண்டர்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து, பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.
அதிமுகவில் அதிருப்தியும் புதிய கணக்குகளும்!
அதுமட்டுமின்றி, தேர்தலுக்கு முன்பே ‘கூட்டணி ஆட்சி’ என்றும், ‘பாஜக-அதிமுக கூட்டணி’ என அதிமுகவை சற்றே பின்னுக்கு பாஜக தள்ளி வைப்பதும், அதிமுகவின் முன்னணி தலைவர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாஜக கூட்டணியில் இருப்பதால் மற்ற கட்சிகள் இந்த கூட்டணிக்கு வர தயங்குவதாகவும், குறிப்பாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக இருக்கும் கட்சிகள்கூட, அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை நெருடலாக பார்க்கின்றன என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து, அதிமுக தலைமை சில அதிரடி முடிவுகளை எடுக்க இருப்பதாகவும், அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை வெளியேற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்படி அண்ணாமலையை காரணம் காட்டி, கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியை அதிமுக தவிர்த்ததோ, அதேபோல், தற்போது ‘கூட்டணி ஆட்சி’ என்பதை ஒரு காரணமாக காட்டி பாஜகவை வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
புதிய கூட்டணி சாத்தியங்கள்: வலுவான எதிர்க்கணி உருவாகுமா?
ஒருவேளை, பாஜகவை வெளியேற்றிவிட்டால், அதிமுக கூட்டணியில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அதிமுகவுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், மதிமுகவும், தேமுதிகவும் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடும் என்றும், விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் இந்தக் கூட்டணிக்கு வருவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
எனவே, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம், தேமுதிக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இணைந்தால், கண்டிப்பாக முப்பது முதல் நாற்பது சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்து விடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக தைரியமாக முடிவெடுத்து பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றுமா? மற்ற முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையுமா? திமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் இந்த கூட்டணி இருக்குமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.