நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்..நாய் குரைப்பதை மொழிபெயர்த்து சொல்லும் AI கருவி.. இனி ஆடு, மாடு, கோழி பேசுவதையும் கேட்கலாம்..

  செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு எப்போதும் ஒரு பெரிய சவால் உண்டு. அவற்றுடன் நாம் எவ்வளவுதான் நெருக்கமாக இருந்தாலும், அவற்றின் உணர்வுகளை புரிந்துகொள்வது கடினம். இந்த இடைவெளியை குறைக்க, சீன தொழில்நுட்ப நிறுவனமான பைடு…

dog

 

செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு எப்போதும் ஒரு பெரிய சவால் உண்டு. அவற்றுடன் நாம் எவ்வளவுதான் நெருக்கமாக இருந்தாலும், அவற்றின் உணர்வுகளை புரிந்துகொள்வது கடினம். இந்த இடைவெளியை குறைக்க, சீன தொழில்நுட்ப நிறுவனமான பைடு ஒரு அசத்தலான முயற்சியில் இறங்கியுள்ளது. விலங்குகள் வெளிப்படுத்தும் சைகைகள், ஒலிகள், உடல் மொழி என அனைத்தையும் பகுப்பாய்வு செய்து, அவற்றை மனித மொழியில் மொழிபெயர்க்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கி வருகிறது.

இந்த AI கருவி, விலங்குகளின் குரல், உடல் அசைவுகள், வழக்கமான நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற உயிரியல் அறிகுறிகள் என பல்வேறு தரவுகளை சேகரிக்கிறது. இதன் மூலம் விலங்குகளின் உணர்ச்சி நிலைகளை துல்லியமாக புரிந்துகொண்டு, மனிதர்களுக்கு புரியும் மொழியில் மொழிபெயர்க்கும். மனிதர்களுக்கும் செல்ல பிராணிகளுக்கும் இடையேயான உணர்ச்சிப்பூர்வமான தொடர்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று பைடு கூறுகிறது. இந்த நூதன தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையையும் பைடு சமீபத்தில் பதிவு செய்துள்ளது.

பைடுவின் கூற்றுப்படி, இந்த கருவி தற்போது ஆராய்ச்சி கட்டத்தில் இருந்தாலும், அதன் சாத்தியக்கூறுகள் நம்பிக்கையளிக்கின்றன. இது குறித்து பேசிய நிறுவன செய்தி தொடர்பாளர், AI தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் பயன்படுத்துவதே பைடுவின் இலக்கு என்றும், இந்த கருவியின் எதிர்கால வளர்ச்சி குறித்து இப்போதே கருத்து தெரிவிப்பது சாத்தியமில்லை என்றும் கூறினார்.

செல்லப் பிராணிகளின் மொழியை புரிந்துகொள்ளும் முயற்சி இது முதல் முறை அல்ல. இதற்கு முன் பல செயலிகள், விலங்குகளின் ஒலிகளை மனித மொழியில் மொழிபெயர்ப்பதாக கூறினாலும், அவை பெரும்பாலும் திருப்தியளிக்கவில்லை. 2014ஆம் ஆண்டு ஸ்காண்டிநேவியாவில் “நோ மோர் வூஃப்” (No More Woof) என்ற பெயரில் ஒரு சாதனம் உருவாக்க ₹18.7 லட்சம் திரட்டப்பட்டது. ஆனால், அதிக செலவு மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக மூன்று வருடங்களுக்குப் பிறகு அது கைவிடப்பட்டது.

பைடுவின் இந்த முயற்சி, மேம்பட்ட AI தொழில்நுட்பத்தையும், விலங்குகளின் பலவித உணர்ச்சி தரவுகளையும் ஒருங்கிணைப்பதால் தனித்து நிற்கிறது. இது செல்ல பிராணிகளுடன் நாம் தொடர்புகொள்ளும் விதத்தில் ஒரு பெரிய பாய்ச்சலாக அமையலாம். இந்த கருவி ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், நம் செல்ல பிராணிகளை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள இது ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.