பஞ்சாப் மாநிலம் மாலேர் கோட்லா மற்றும் ஹரியானாவில் இருந்து கைது செய்யப்பட்ட ஆறு பேர், பாகிஸ்தான் தூதரக அதிகாரியான “டானிஷ்” என்பவருக்காக உளவு பார்த்து வந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. டானிஷ், மே 14-ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா விடுத்த கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து 6 பாகிஸ்தான் உளவாளிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டானிஷுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது..
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா “Travel With Jo” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற ரமலான் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அங்கு டானிஷ் மற்றும் அவரது மனைவியுடன் நேரில் சந்தித்ததாகவும் யூடியூபில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், பாகிஸ்தானை பார்வையிட விருப்பம் இருப்பதாகவும், தன்னிடம் விசா பெற உதவுமாறு பார்வையாளர்களை கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. பின்னர், டானிஷ் அவருக்கு பாகிஸ்தான் விசா ஏற்பாடு செய்தார் என்றும், அவர் பாகிஸ்தான் சென்று மீண்டும் இந்தியா திரும்பியதும் வெளிவந்துள்ளது.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 6 பேரும் ரகசிய சட்டம் மற்றும் BNS பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 5 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
ஹரிஸ் குமார் என்பவரின் மகளான ஜோதி மல்ஹோத்ரா அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் மற்றும் BNS பிரிவு 152 கீழ் கைது செய்தோம். அவருடைய மொபைல் மற்றும் லேப்டாப்பில் சந்தேகமான தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் தொடர்ந்த தொடர்பில் இருந்தார்” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தூதரக அதிகாரியான டானிஷ், பஹல்காம் தாக்குதலும் அதன் பின் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையையும் தொடர்ந்து 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டது.
அவரது உண்மையான அடையாளம் எஹ்ஸான்-உர்-ரஹீம் என்றும், அவர் பாகிஸ்தான் ISI அமைப்பின் உளவு முகவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் இந்தியாவில் பாகிஸ்தான் தூதரக ஊழியராக வேலை பார்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
