திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த முறை அதிக தொகுதிகள் கேட்பது மட்டுமின்றி, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று கேட்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் இதை எப்படி சமாளிப்பார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டாம், ஆனால் அதே நேரத்தில் அதிக தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பியிருந்தாலும், தேர்தலுக்கு முன்னர் அப்படி ஒரு நிபந்தனையை வைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை, மு.க. ஸ்டாலின் நேரடியாக ராகுல் காந்தியுடன் பேசி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை தவிர்த்து விடுவார் என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மிக மிக நன்றாக தெரியும்.
மதிமுகவை பொருத்தவரை எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஏனெனில், அது திமுகவின் ஒரு அங்கமாகவே கிட்டத்தட்ட மாறிவிட்டது. எனவே, எந்த வித கோரிக்கையையும் அந்தக் கட்சி எழுப்பாது என்றுதான் திமுக தரப்பு நம்புகிறது. எனவே, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிக எளிதாக டீல் செய்து விடுவார்.
ஆனால், அதே நேரத்தில் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை திமுக பெறவில்லை என்றால், கண்டிப்பாக அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் எழுப்பும் என்பதும், அதை எப்படி முக ஸ்டாலின் சமாளிப்பார் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
அதிமுக கூட்டணியை பொருத்தவரை, இப்போதே பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சிதான் என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டது. சமீபத்தில் மதுரை வந்த அமித்ஷா, பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று சொன்னதிலிருந்து அந்தக் கோரிக்கையை அவர்கள் ஆரம்பம் முதலே வைத்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அதேபோல், பாமக மற்றும் தேமுதிகவும் கூட்டணி ஆட்சிக்கு குரல் கொடுத்து வருகின்றன. திமுக போலவே அதிமுகவும் 118 என்ற மேஜிக் நம்பரை பெறாவிட்டால், கண்டிப்பாக கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை 118 என்ற நம்பர் இருந்தால் கூட, பாஜக ஏதாவது செய்து அதிகாரத்தில் பங்கு வாங்கிவிடும் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், 2026 ஆம் ஆண்டு அமைய இருக்கும் அரசு கூட்டணி அரசாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.