கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும், சினிமா பிரபலங்கள் அதனை எதிர்த்து குரல் கொடுப்பார்கள் என்றும், குறிப்பாக சாத்தான்குளம் அப்பா – மகன் லாக்கப் டெத் விவகாரத்தில் பல திரையுலகப் பிரபலங்கள் பொங்கி எழுந்தார்கள் என்றும் பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், இன்று அதே மாதிரியான ஒரு லாக்கப் டெத் நடந்துள்ள நிலையில், எந்த பிரபலமும் வாய் திறக்காமல் அனைவரும் மௌனமாக இருப்பது வருத்தம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
“லாக்கப் டெத்தை வைத்தே ஜெய்பீம் என்ற திரைப்படத்தை தயாரித்து நடிகர் கோடி கோடியாக சம்பாதித்தார் ஒரு நடிகர். அவர்தான் சாத்தான்குளம் சம்பவத்தின்போது பொங்கி எழுந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரகாஷ்ராஜ்க்கும், தமிழக அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் எந்த பிரச்சனை நடந்தாலும் உடனே அதற்கு குரல் கொடுப்பார். ஆனால், இன்று இந்த இருவரும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை; வாயை மட்டுமல்ல, அனைத்தையும் பொத்திக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள்” என்று மணி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆட்சியில் ஆவேசமாக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த சத்யராஜ் உட்படப் பல நடிகர்கள் தற்போது மௌனமாக இருக்கிறார்கள் என்றும், அதற்கு ஒரே காரணம், தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக ஆளும் கட்சியின் பிடியில் இருப்பதுதான் என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அவர் சினிமாக்காரர்கள் பக்கம் திரும்பவே இல்லை என்றும், அவர்கள் மீது தனது அதிகாரத்தையும் அவர் செலுத்தவில்லை என்றும் மணி சுட்டிக்காட்டினார். ஆனால், 1996 – 2001 மற்றும் 2006 – 2011 காலகட்டங்களில் தி.மு.க. சினிமாக்காரர்களை தன் பிடியில் வைத்திருந்தது என்றும், இப்போதும் ஒட்டுமொத்த சினிமாவும் அவர்களது பிடியில் இருப்பதால், ஆளுங்கட்சியை எதிர்த்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்படப் பல நடிகர்கள் அஜித்குமார் மரணம் பற்றி வாயே திறக்கவில்லை. ரஜினி ஆவது அரசியலுக்கு வரவில்லை. ஆனால், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து ஒரு கட்சியை ஆரம்பித்து, தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்ட நிலையில், தி.மு.க. ஆட்சியில் நடக்கும் எந்த ஒரு அட்டூழியத்தையும் தட்டி கேட்பதில்லை என்றும், அஜித்குமார் மரணத்திற்கு அவர் ஒரு ட்வீட் கூட போடவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மொத்தத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் தவறு நடந்தால் பொங்கும் சினிமா பிரபலங்கள், தி.மு.க. ஆட்சியில் எந்த தவறு நடந்தாலும் வாயை பொத்திக்கொண்டு அமைதியாக இருக்கும் நிலையில்தான் உள்ளனர் என்பதே பத்திரிகையாளர் மணி அவர்களின் கருத்தாக உள்ளது.
Cinema Celebrities Silent During DMK Rule, Journalist Mani