என்னோட காலை எடுக்கணும்ன்னு சொன்னாங்க.. தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய விக்ரம்..

Published:

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. விக்ரமின் அசுரத்தனமான உழைப்பு தங்கலான் படத்தில் தெரிகிறது.

மேலும் மினிக்கி மினிக்கி பாடலும் டிரெண்டிங்கான நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சீயான் விக்ரம், பா.ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட படக்குழுவைச் சார்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.

விழாவில் விக்ரம் பேசிய போது, “என்னை ஏன் இந்தமாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன் என்று அனைவரும் கேட்கிறார்கள். பிதாமகன், சேது, அந்நியன், ஐ, இராவணன் போன்ற படங்களில் நடித்ததில் 8 சதவீதம் கூட தங்கலான் படத்தினைத் தொடாது. அந்த அளவிற்கு தங்கலான் படத்தில் நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். எனக்குள் தங்கலான் இருக்கிறான். அவனுக்கும் எனக்கும் நிஜமாகவே ஒரு தொடர்பு இருப்பதைப் போல் உணர்கிறேன்.

சிறுவயதிலிருந்தே நடிப்பின் மேல் தீராத ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிக் காலங்களில் நடிக்கும் நாடகங்களில் கூட கஷ்டமான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஐஐடி-யில் படிக்கும் போது கல்லூரி விழாக்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் சிறப்பான நடிகர் என்ற விருது கிடைத்தது. அந்த தருணத்தில் எனக்கு விபத்து நடந்தது. இதனால் 3 வருடம் படுக்கையிலேயே கிடந்தேன். என்னுடைய காலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

23 ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகும் ஒருவருடம் ஊன்றுகோல் துணையுடனே நடந்தேன். என்னால் இயல்பாக நடக்கவே முடியாது என்று உறுதியாக டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் நான் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். தொடர்ந்து முயற்சித்தேன். பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் எந்தப் படமும் ஓடவில்லை. 10 வருடமாக முயற்சித்தேன். எல்லோரும் வேண்டாம் என்று வெறுத்தார்கள்.

பேரழிவில் மலர்ந்த மனித நேயம்.. வீடுகளை இழந்தவர்களுக்கு கடவுளாக வந்த பாபி செம்மனூர்

நடிக்க முயற்சித்துக் கொண்டே வேலைக்கும் சென்றேன். அப்போது எனக்கு ஒருமாசத்துக்கு 750 ரூபாய் தான் சம்பளமே. என்னுடைய நண்பர்கள் அனைவருமே முன்னுக்கு வந்து விட்டனர். நான் மட்டும் அப்படியே இருந்தேன். அன்று நான் வேண்டாம் என்றிருந்தால் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன். ஏனெனில் சினிமாவை அந்த அளவிற்கு நேசிக்கிறேன். சரியான வாய்ப்புகள் இல்லையென்றால் இன்னமும் முயற்சித்துக் கொண்டுதான் இருப்பேன். ஏனென்றால் சினிமா தான் என் லட்சியமே.

சாதாரணமாக அனைவரும் கதைக்கு ஏற்ற ஹீரோவைத்தான் தேர்வு செய்வார்கள். ஆனால் ரஞ்சித் முதன் முதலாக என்னை ஹீரோவாக வைத்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் என்னை ஷங்கர், மணிரத்னம், ஹரி போன்ற இயக்குநர்கள் உருவாக்கியதால் தான் என்னைப் போன்ற நடிகர்கள் இங்கே இருக்க முடிகிறது” என்று பேசினார்.

மேலும் உங்களுக்காக...