ஸ்டீயரிங் பிடிக்கிற கையில இப்போ கேமரா.. மாத வருமானம் மினிமம் 4 லட்சம்.. கலக்கும் லாரி டிரைவர்

Published:

சாதிப்பதற்கு வயது தடையேயில்லை என்பதை உலகில் ஆங்காங்கே தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகள் நம்மை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்று சமூக ஊடகங்கள் தான் உலகையே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. நொடிக்கு நொடி உலகின் எந்த ஒரு மூலையிலும் நடக்கும் செய்திகளை சமூக வலைதளங்கள் உள்ளங்கையில் கொண்டு வந்து காண்பிக்கின்றன. இதனால் சமூக ஊடகங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

ஆனால் அதே நேரம் சமூக ஊடகங்கள் இன்று பணம் ஈட்டும் லாபகரமான தொழிலாகவும் மாறி வருகிறது. கொரோனா காலத்திற்குப் பின் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்ட்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்தது. லட்சக்கணக்கான கிரியேட்டர்களும் உருவாகினார்கள். தங்கள் திறமையை வெளிக்காட்ட வீடியோ போடத் துவங்கியவர்கள் இன்று அதனையே அதிக பணம் ஈட்டும் தொழிலாக மாற்றியிருக்கின்றனர்.

அப்படி தான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும். லாரி டிரக் டிரைவராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் தினந்தோறும் நெடுஞ்சாலைகளில் அதிக தூரம் பயணிக்கும் தொழிலை செய்பவர். இதனால் லாரியிலேயே சமைத்து உண்பது வழக்கம். அதன்படி ஒருநாள் தான் சமைக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்ற ஆயிரக்கணக்கில் லைக்ஸ் வந்திருக்கிறது.

முடி கொட்டுகிறது என புலம்பிய பெங்களூரு கூகுள் பெண் ஊழியர்.. நெட்டிசன்கள் கொடுத்த அட்வைஸ்..!

அப்போது தான் அவருக்கு ஐடியா உதயமானது. இதையே தொடர்ந்து செய்தால் என்ன என்று தினந்தோறும் லாரி பயணத்தின் போது உணவு இடைவேளைகளில் தான் சமைப்பதை வீடியோ எடுத்து யூ டியூப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்டவற்றில் பதிவேற்ற பார்வைகள் எகிறத் தொடங்கியது.

இதனால் இவரை லட்சக்கணக்கில் பின்தொடர ஆரம்பித்தனர். தற்போது ராஜேஷ் Vlogs என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் இந்த லாரி டிரைவர் தனது சேனலில் சுமார் 1.8 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கிறார். இதன் மூலம் இவர் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை. மேலும் தனது மெயின் தொழிலான லாரி ஓட்டுவதன் மூலம் மாதம் 25,000 முதல் 30,000 வரை ஈட்டுகிறார்.

மேலும் இன்ஸ்ட்டா பக்கத்திலும் சுமார் 1.2 மில்லியன் பாலோயர்களைக் கொண்டுள்ளார். சமையலின் மீது இருக்கும் ஆர்வத்தால் சிறிதாகத் தொடங்கிய இவரது வீடியோ பயணம் இன்று இவரை மிகச்சிறந்த கண்டென்ட் கிரியேட்டராக மாற்றியிருக்கிறது. கடின உழைப்பிற்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு இவரின் வாழ்க்கையும் ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

மேலும் உங்களுக்காக...