துருக்கிக்கு எதிராக இந்திய அரசு எடுத்த கடுமையான நடவடிக்கை – தேசிய பாதுகாப்புக்காக செலெபி ஏவியேஷன் நிறுவனத்தின் அனுமதி ரத்து!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலின் போது பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் துருக்கிக்கு எதிராக, இந்தியாவின் சிவில் விமான பாதுகாப்பு ஆணையம் (BCAS) கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. துருக்கியை சேர்ந்த Celebi Aviation நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோவா, அகமதாபாத், கொச்சி, கண்ணூர் ஆகியவற்றில் விமானங்களை தயார் செய்யும் பணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டுவ ருகிறது.
BCAS தனது அதிகாரபூர்வ உத்தரவில் “Celebi Airport Services India Pvt. Ltd என்ற நிறுவனத்திற்கு 21.11.2022 அன்று பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதைய தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கு ஆயுத ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களில் துருக்கி உதவியதால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான IndiGo, துருக்கி ஏர்லைன்ஸுடன் கூட்டணி முக்கியம் என கூறி, விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
இதேபோல், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா ஆகியவை துருக்கி கல்வி நிறுவனங்களுடன் வைத்திருந்த ஒப்பந்தங்களை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளன.
முக்கிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கங்களும் துருக்கியை கடுமையாக விமர்சித்து, துருக்கியுடன் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பை இந்தியா நிறுத்தவேண்டும் என கோரியுள்ளனர்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உள்நோக்கிய நடவடிக்கையாக, Celebi நிறுவனத்தின் அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பது, துருக்கியின் செயற்பாடுகளுக்கு எதிரான கடுமையான பதிலடியாக கருதப்படுகிறது.