மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தின் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் விழாவில் 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 2,500 கிலோ அரிசி சமைத்து ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறிவிருந்து நடந்தது. இந்த விருந்தின் சுவாரஸ்ய பின்னணி பற்றி பார்ப்போம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தின் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் காணப்படுகிறது. கரும்பாறை முத்தையா சுவாமி கோவிலில் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரம் நடைபெறுவது வழக்கமாகும்
பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறியதற்காக கருப்பு ஆடுகளை மட்டுமே காவல் தெய்வமான முத்தையா சுவாமிக்கு வழங்குவார்கள். இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடிச்செல்லும்போது கருப்பசாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை விவசாயிகள் யாரும் விரட்டமாட்டார்கள்.
விழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கிராமப்புறங்களில் சுற்றி திரியும் ஆடுகளை எல்லாம் ஒன்று சேர்ப்பார்கள். விழாவின்போது சுவாமிக்கு பலியிட்டு அசைவ அன்னதான உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் அசைவ உணவு திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகளை பலியிடப்பட்டன. தொடர்ந்து 2,500 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை ஒரு இடத்தில் மலை போல் குவிக்கப்பட்டத மேலும் ஆட்டு இறைச்சியை கொண்டு கறிக்குழம்பு சுடச்சுட சமைக்கப்பட்டது. உணவை சாமிக்கு படைத்து பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர் பக்தர்களுக்கு கமகமவென கறிவிருந்துடன் அன்னதானம் நடைபெற்றது.
பக்தர்கள் அனைவரும் வரிசையில் அமர்ந்த பின்பு இலைகள் போடப்பட்டு அதில் சாதம், கறிக்குழம்பு என பரிமாறப்பட்டு விருந்து நடைபெற்றது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச்செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின் இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலிக்கு சாமி தரிசனத்திற்கு வருவார்கள்.