சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த வீடியோவில், இந்திரகுமார், குரு அனிருத்தாச்சாரியிடம் தனக்கு 18 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், ஆனால் அதனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு குரு அனிருத்தாச்சாரியர் எந்த அறிவுரையும் வழங்காமல், வேடிக்கையாக பேசி முடித்திருந்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த வீடியோ மோசடி கும்பலின் கண்களில் பட்டுவிட்டது. வீடியோ வெளியான சில நாட்களிலேயே இந்திரகுமார் காணாமல் போனார். பின்னர், ஜூன் 6 அன்று, உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், புதர்களுக்குள் அவரது உடல், கழுத்தில் கத்தி காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் இது குறித்து பேசுகையில், “முதற்கட்ட விசாரணையில், சாகிபா பானோ என்ற பெண், ‘குஷி திவாரி’ என்ற போலி பெயரில் சமூக வலைத்தளங்கள் வழியாக இந்திரகுமாரை திருமணம் செய்ய அணுகியுள்ளார். இந்திரகுமார் மற்றும் சாகிபா இடையே அறிமுகம் ஏற்பட்ட பிறகு, சாகிபா அவரை உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூருக்கு வரவழைத்துள்ளார். அதன்பின் இந்திரகுமாரை தான் செய்ய விரும்புவதாக கூறிய சாகிபா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு வலையை விரித்துள்ளார்” என்றார்.
அதன்பின் இந்திரகுமார் – சாகிபா திருமணம் நடந்த நிலையில் திருமணமான சில நாட்களுக்கு பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணும் அவரது கூட்டாளிகளும் அவரை கொன்று, அவர் வைத்திருந்த சில நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது” என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்திரகுமாரின் உடல், கழுத்தில் கத்தியுடன், குஷிநகரில் உள்ள ஹடா கோட்வாலி பகுதிக்குட்பட்ட சுகாரௌலி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
“சாகிபா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு போலி ஆதார் அட்டையையும் வைத்திருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது” என்று காவல் கண்காணிப்பாளர் மேலும் தெரிவித்தார். இந்த வழக்கின் மர்மத்தை கண்டறிய, மத்தியப் பிரதேச காவல்துறையினர் உத்தரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் விசாரணையின்போது 18 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க சாகிபா கேட்டதாகவும், ஆனால் இந்திரகுமார் அதற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாகவும் தெரிகிறது.
கடந்த சில நாட்களாகவே திருமணம் செய்த சில நாட்களில் கணவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் தேனிலவு கொலை உள்பட பல கொலைகள் கள்ளக்காதல் மற்றும் சொத்துக்காகவும் நகைக்காகவும் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள் என்ற செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்பின் தெரியாதவர்களையும், மேட்ரிமோனியில் மூலம் திருமணம் செய்ய முயற்சிக்கும் போது நன்றாக விசாரித்து குடும்ப பின்னணியை அறிந்தபின் திருமணம் செய்யவும் என்றும் இல்லாவிட்டால் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெண் எடுத்து திருமணம் செய்வதே பாதுகாப்பானது என்றும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.