தென்காசி: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அப்படி வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கோவிலில் ஒவ்வொரு மாதமும் 20-ந்தேதிக்கு மேல் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்படுவது வழக்கம். கடந்த 25ம் தேதி சங்கரநாராயண கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, 4 பெண்கள் காணிக்கை பணத்தை நைசாக திருடியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த கோவில் நிர்வாகம் சார்பில் அங்குள்ள புறக்காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெண் போலீஸ் உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது.
சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரி (வயது 42), முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து உண்டியல் காணிக்கை பணம் ரூ.17,710-ஐ திருடியதும் தெரியவந்தது. மேலும் மகேஷ்வரி தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றும் அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதையடுத்து 4 பேரும் சங்கரன்கோவில் டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிந்து மகேஷ்வரி உள்பட 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து இவர்கள் 4 பேரும் சேர்ந்து வேறு எங்கேயும் இதுபோன்று கைவரிசையில் ஈடுபட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.