நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல தமிழக வெற்றிக் கழகம்; மாறாக, பல ஆண்டுகாலச் சீரிய உழைப்பின் மூலம் வித்திடப்பட்டு இன்று ஆலமரமாய் விஸ்வரூபம் எடுத்துள்ள மாபெரும் மக்கள் இயக்கம். கடந்த 2009 ஆம் ஆண்டு இதே ஜூலை 26 ஆம் தேதியன்று நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு ‘விஜய் மக்கள் இயக்கம்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தனித்தனியாக இருந்த சுமார் 85,000-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர் மன்றங்களை ஒரே புள்ளியில் ஒருங்கிணைத்துத் தொடங்கப்பட்ட இந்த அடிமட்ட அமைப்பு, நாளடைவில் கோடிக்கணக்கான மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நம்பகமான முகவரியாக உருவெடுத்தது.
வெறும் சினிமா கொண்டாட்டங்களுடன் நின்றுவிடாமல், மக்கள் நலப்பணிகளையே தங்களது முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படத் தொடங்கியது. வறட்சி காலங்களில் உதவிகள், மாணவர்களுக்குக் கல்வி மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கல், மருத்துவ முகாம்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகளின் போது களமிறங்கிச் செய்யும் நிவாரணப் பணிகள் எனத் தொடர்ந்து பல்வேறு மக்கள் சேவைகளில் ரசிகர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். எவ்விதப் பின்புலமும் இல்லாமல், தலைவன் விஜய்யின் மீது கொண்ட அன்பின் காரணமாகச் சொந்தக் காசைச் செலவழித்து, தங்களது வியர்வையைச் சிந்தி இந்த இயக்கத்தைத் தாங்கிப் பிடித்தனர் உண்மையான தொண்டர்கள்.
தன்னலமற்றுத் தொடர்ந்த இந்த நீண்ட நெடிய 17 வருட உழைப்புதான், இன்று இந்த இயக்கத்தை ஒரு வலிமையான அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. கடந்த 2024 ஆம் ஆண்டில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக உருவெடுத்த இந்த அமைப்பு, தமிழக அரசியல் களத்தில் மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு மாற்றத்திற்கான சக்தியாக நிலைநிறுத்திக் கொண்டது. மக்களின் எதிர்பார்ப்புகளையும் தற்போதைய அரசியல் தேவையையும் சரியாகப் புரிந்து கொண்டு களமிறங்கியதால், மக்கள் மத்தியில் தவெகவின் செல்வாக்கு மின்னல் வேகத்தில் உயர்ந்தது.
அரசியல் களத்திற்குப் புதிய வரவு என்றாலும், நீண்ட கால மக்கள் சேவையின் பலனாக மக்கள் தவெகவை இரு கரம் நீட்டித் தழுவிக்கொண்டனர். வழக்கமான கட்சிகளைப் போல தேர்தல் காலத்தில் மட்டும் தோன்றி வாக்குச் சேகரிக்கும் தந்திரங்களை விடுத்து, மக்களின் அடிமட்டப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வந்ததால் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்குக் குறுகிய காலத்தில் அபாரமான வரவேற்பு கிடைத்தது. இந்த மக்களின் பேரன்பும் நம்பிக்கையும்தான், அரசியலில் அடியெடுத்து வைத்த குறுகிய காலத்திற்குள்ளேயே மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்து ஆட்சியைப் பிடிக்கும் வரலாற்றுச் சாதனையைத் தவெக நிகழ்த்தக் காரணமானது.
எளிமையான மக்கள் இயக்கமாகத் தொடங்கி, இன்று தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து முதல்வராகி முத்திரை பதித்துள்ளார் விஜய். இது ஏதோ தற்செயலாக நடந்த அரசியல் அற்புதம் அல்ல; மாறாக, ஒட்டுமொத்த ரசிகர்களும் தொண்டர்களும் தங்களது சொந்த உழைப்பைக் கொட்டி உருவாக்கிய கட்டமைப்பின் வெற்றியாகும். எதிர்க்கும் சக்திகளின் சதிகளையும் தடைகளையும் தாண்டி, மக்களின் தீர்ப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்துக் காட்டியுள்ளது தமிழக வெற்றிக் கழகம். அரசியலில் வளர்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரமாகும்.
இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் தவெகவின் இந்த அசுர வளர்ச்சி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பொற்காலத்திற்கு வித்திட்டுள்ளது. கடந்த காலங்களில் மக்களுக்காகச் செய்த நற்காரியங்களின் பலன் இப்போது முழுமையான அதிகார வடிவில் மக்களின் சேவைக்காகக் கிடைத்துள்ளது. நேர்மையான, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதன் மூலம், தங்களை நம்பி வாக்களித்த கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, இந்திய அரசியலில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை தவெக நிலைநிறுத்தி வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
