தமிழ்நாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் தற்போதைய தவெக அரசின் மீது மக்களிடையே அதிகரித்து வரும் நம்பிக்கையும் நல்ல மதிப்பும் பல அரசியல் எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடியான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் பொதுமக்களிடம் அரசின் மீது நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.
இந்தச் சூழலைத் தாங்கிக் கொள்ள முடியாத சிலர், ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்தே அறநிலையத்துறை அமைச்சரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். கோயில்களில் முன்பு பணியாற்றிய சில அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து அவரது பணிகளை முடக்க சில தரப்பினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் மீது மக்களிடம் நாளுக்கு நாள் உருவாகி வரும் நல்லெண்ணத்தைக் குலைக்கும் தீய நோக்கத்துடன், குறிப்பாக்க் கோயில்களை மையமாக வைத்துத் தவறான தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வடபழனி முருகன் கோயிலை இதற்கு ஒரு சான்றாகக் கூறலாம்; அங்குப் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு மட்டுமே தற்காலிக அமைப்பு அல்லது ஷெட் அமைக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் முன்னரே வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று மாத அனுமதி காலம் முழுமையாக நிறைவடைந்த பிறகு, உரிய விதிகளின்படி அந்தத் தற்காலிக அமைப்பு அகற்றப்பட்டது. ஆனால், இந்த உண்மைகளை முழுமையாக மறைத்துவிட்டு, தற்போதைய அரசுதான் திட்டமிட்டு அந்த ஷெட்டை அகற்றி வியாபாரிகளைப் பாதித்துள்ளது என்ற தோற்றத்தைத் பொதுமக்களிடம் உருவாக்கும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன.
மேலும், வடபழனி கோயிலில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாகச் சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் சரியான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலும் சிலர் செயல்படுகின்றனர். வெளிப்புற நபர்களைப் பயன்படுத்தி அமைச்சருக்கும் அரசுக்கும் எதிராகத் திட்டமிட்டு அவதூறுகளையும் தவறான கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே காலம் முடிந்ததும் அந்தத் தற்காலிக அமைப்பு அகற்றப்பட்டது.
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் இதுபோன்று பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பின்னணியில் எந்த அரசியல் சக்தி இருந்தாலும், காவல்துறை உரிய தீவிர விசாரணை நடத்திச் சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
