உலகிலேயே முதன்முறையாக, சீன மருத்துவர்கள் செயற்கைக்கோள் உதவியுடன் 5,000 கிலோமீட்டருக்கும் அப்பால் இருந்து ரோபோடிக் கல்லீரல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்பு, அடிப்படை வசதிகள் இல்லாத தொலைதூர பகுதிகள், கிராமப்புறங்கள் அல்லது போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் கூட, அதிநவீன அறுவை சிகிச்சை வசதிகள் கிடைக்க வழிவகுக்கிறது.
இந்த அறுவை சிகிச்சைகள் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிலையில், அறுவை சிகிச்சைக்கான ரோபோவை லாசாவில் இருந்து, அதாவது 5,000 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் இருந்து, மருத்துவ குழுவினர் கட்டுப்படுத்தினர்.
தரைவழி 5G நெட்வொர்க்குகளை பயன்படுத்தாமல், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவ்வளவு சிக்கலான அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டது உலகிலேயே இதுதான் முதன்முறையாகும்.
பொதுவாக, 5G தொலைநிலை அறுவை சிகிச்சைகள் (டெலிசர்ஜரி) ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பாக இருந்தாலும், சில வரம்புகளை கொண்டிருந்தன. சிக்னல் தரம் குறைவதனால் சுமார் 5,000 கி.மீ தூரத்திற்கு அப்பால் செயல்பட முடியாத நிலை இருந்தது. மேலும் நிலையான தரைவழி உள்கட்டமைப்பை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அதிவேக 5G வசதி இல்லாத பேரழிவு பகுதிகள், போர்க்களங்கள் அல்லது தொலைதூர கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலையும் இருந்தது.
ஆனால் தற்போது செயற்கைக்கோள் மூலம் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்வது குறித்த கண்டுபிடிப்பு மேற்கண்ட அனைத்து வரம்புகளையும் நீக்கிவிட்டது. 5G நெட்வொர்க்குகளை போலல்லாமல், செயற்கைக்கோள்கள் உலகம் முழுவதும் இந்த சேவையை வழங்க முடியும். மலைகள், பாலைவனங்கள், தீவுகள் அல்லது உள்கட்டமைப்பு முற்றிலும் அழிந்த பேரழிவு பகுதிகள் என எந்த இடமானாலும் இதன் மூலம் சென்றடைய முடியும்.
இந்த மருத்துவக் குழு பூமியிலிருந்து 36,000 கி.மீ உயரத்தில் சுற்றி வரும் Apstar-6D என்ற தகவல்தொடர்பு செயற்கைக்கோளை பயன்படுத்தியது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எங்கிருந்தும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும், அவர்களுக்கு தேவையான செயற்கைக்கோள் இணைப்பு வசதி மட்டும் இருந்தால் போதும்.
செயற்கைக்கோள் தகவல்தொடர்பில் பொதுவாக ஒரு பெரிய குறைபாடு உண்டு. அது தாமதம். அதாவது, ஒரு கட்டளை கொடுக்கப்பட்டு, அது செயல்படுத்துவதற்கு இடையில் ஏற்படும் காலதாமதம். அறுவை சிகிச்சையை பொறுத்தவரை, சில மில்லி விநாடிகள் தாமதம் கூட உயிருக்கான ஆபத்தான நிலையை கொண்டு வரலாம். நேரலை அறுவை சிகிச்சை அமைப்புகளுக்கு 200 மில்லி விநாடிகளுக்கும் குறைவான தாமதம் அவசியம். ஆனால், செயற்கைக்கோள் மூலம் ஏற்படும் தாமதம் 600 மில்லி விநாடிகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கக்கூடும். இந்த சவாலை எதிர்கொள்ள, பேராசிரியர் லியுவின் குழு மூன்று முக்கிய புதிய உத்திகளை பயன்படுத்தியது:
Adaptive Latency Compensation என்ற மென்பொருள், ரோபோடிக் கைகளின் இயக்கத்தில் ஏற்படும் தாமதங்களை முன்கூட்டியே கணித்து, அவற்றை நிகழ்நேரத்தில் சரிசெய்தது. இதன் காரணமாக 500 மில்லி விநாடிகள் தாமதங்கள் இருந்தபோதிலும், கைகளின் இயக்க பிழை 0.32 மில்லிமீட்டராக மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.
ஒருவேளை செயற்கைக்கோள் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டால், சிஸ்டம் உடனடியாக 5G நெட்வொர்க்கிற்கு மாறிவிடும். இந்த உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சம், அறுவை சிகிச்சையின் நடுவில் எவ்வித தடங்கலும் ஏற்படாமல் பார்த்து கொண்டது.
பெய்ஜிங்கில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக தொலைதூர அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒருவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 68 வயது முதியவர், இன்னொருவர் ஹெபடிக் ஹேமன்கியோமா கண்டறியப்பட்ட 56 வயதுடையவர்.
மேற்கண்ட இரண்டு நோயாளிகளும் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பதும், அறுவை சிகிச்சையின்போது எவ்வித சிக்கல்களோ அல்லது தாமதமோ ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொலைதூர அறுவை சிகிச்சை எதிர்காலத்தில் 1,50,000 கி.மீ வரை செய்ய முடியும் என்றும், உலகின் எந்த ஒரு இடத்தில் இருந்தும் எந்த ஒரு இடத்திலும் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.