அதிகாலையிலேயே தூக்கத்திலிருந்து எழுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. நாள் முழுவதும் நம்மை உற்சாகத்துடன் வைத்திருக்க முடியும். மனதை ஒருநிலைப்படுத்தி நம்முடைய வேலைகளை செய்வதற்கான ஆற்றலையும் கொடுக்கிறது. இவ்வாறு பல நன்மைகள் கிடைத்தாலும் ஒரு சிலரால் அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் எழ முடிவதில்லை அவர்களுக்கென்று சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க என்னென்ன செய்யலாம்:
1. சீக்கிரம் உறங்கச் செல்லுதல். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு முதல் ஒன்பது மணி நேர உறக்கம் மிகவும் அவசியம் அதிகாலையில் எழுந்திருக்க விரும்பினால் கூடுமானவரை இரவில் சீக்கிரம் உறங்கச் செல்லுதல் நல்லது. சீக்கிரம் உறங்கி சீக்கிரம் எழுபவர்களுக்கு உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
2. தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பயன்படுத்தாதீர்கள். அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.
3. அலாரம் வைத்து எழுந்திருக்க நினைப்பவர்கள் அலாரத்தை தலைக்கு அருகிலேயே வைத்திருந்தீர்கள் என்றால் அலாரம் அடித்தவுடன் அதனை நிறுத்தி விட்டு மீண்டும் உறங்க தொடங்கி விடுவீர்கள். எனவே அலாரத்தை சற்று தொலைவில் எழுந்து சென்று நிறுத்தும் படி வைத்து விடுங்கள்.
4. உங்கள் அலைபேசியை கூடுமானவரை சைலன்டிலோ அல்லது டூ நாட் டிஸ்டர்ப் என்னும் மோடிலோ வைத்து விடுங்கள். ஏதேனும் நோட்டிஃபிகேஷன் சத்தம் ஏற்பட்டால் கூட தூக்கம் தடைப்பட்டு விழிப்பு ஏற்படும். பின் கைபேசியில் அதனை பார்க்கத் தொடங்கி நீண்ட நேரம் உபயோகிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
5. இரவில் உறங்கச் செல்வதற்கு முன் ஏதேனும் நொறுக்கு தீனிகள் எடுத்துக் கொள்வதோ காபி போன்றவை எடுத்துக் கொள்வதோ வேண்டாம் இடையில் பசிக்கும் என்று தோன்றினால் பால் மட்டும் பருகலாம். மேலும் இரவு உணவு குறைவாகவே எடுத்துக் கொள்ளுதல் நல்லது.
6. காலை எழுவதற்கு ஏதேனும் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள் முக்கியமான வேலை இருந்தால் இரவில் கண் விழித்து செய்வதை தவிர்த்து காலை எழுந்தவுடன் இந்த வேலையை செய்தே தீர வேண்டும் என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு எழுங்கள்.
தினமும் 8 மணிக்கு எழும் ஒருவரால் உடனடியாக நான்கு மணிக்கு எழுந்திருப்பது என்பது இயலாத காரியம் எனவே 15 நிமிடங்கள் முன்னதாக எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள் இப்படியே படிப்படியாக நீங்கள் விரும்பும் நேரத்திற்கு எழுவதற்கு பழகத் தொடங்குங்கள். அதிகாலை சீக்கிரம் எழுவதால் நமக்கு அதிக நேரம் கிடைக்கும். காலை நேர தேவையற்ற பரபரப்பு இருக்காது, போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் கல்லூரிக்கு அலுவலகத்துக்கும் நாம் செல்லவும் முடியும். உடற்பயிற்சி செய்ய விரும்புவோருக்கு காலை நேரம் மிகவும் சரியான நேரம்.