இனி கடைகளில் இதை வாங்க வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம்.. செர்லாக் வீட்டிலேயே எப்படி செய்வது?

Published:

ஒரு குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆன பிறகு அந்த குழந்தைக்கு தாய்ப்பாலோடு சேர்த்து திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் போது பெரும்பாலும் பழங்கள் காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து அதன் பின்பே கொடுக்க வேண்டும்.

ஒரு உணவை மூன்று நாட்கள் கொடுத்து அந்த குழந்தைக்கு அந்த உணவினால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா? குழந்தையின் உடல் அந்த உணவை ஏற்றுக் கொள்கிறதா என்பதை கண்டறிந்த பின்னரே அந்த உணவை குழந்தைக்கு கொடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்.

babyfood 1

ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கெனவே கடைகளில் செர்லாக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த செர்லாக் சில நிமிடங்களில் தயார் செய்துவிட முடியும் என்பதாலும் வெளியூர் செல்லும் பொழுதோ இல்லை பயணங்களின் பொழுதோ சட்டென்று குழந்தைக்கு உணவு கொடுப்பதற்கு இந்த செர்லாக் ஏதுவாக இருக்கும் என்பதாலும் பெரும்பாலும் கடைகளில் விற்கும் செர்லாக்குகளை தாய்மார்கள் பயன்படுத்துவது உண்டு.

food for baby 1

ஆனால் இந்த செர்லாக்கினை நாமே வீட்டில் சுத்தமாகவும் நம் குழந்தைக்கு தேவையான தானியங்களை சேர்த்தும் தயாரித்துக் கொள்ள முடியும்.

செர்லாக் செய்ய தேவையான பொருட்கள்:

  • அரிசி (சிவப்பு அரிசி நல்லது)- 1 1/2 கப்
  • கேப்பை – 1/2 கப்
  • கொள்ளு – 1/2 கப்
  • கருப்பு உளுந்து – 1 கப்
  • பொட்டுக்கடலை – 1/2 கப்
  • பாசிப்பருப்பு – 1/2 கப்
  • நறுக்கிய பாதாம் –  2 ஸ்பூன்
  • நறுக்கிய முந்திரி – 2 ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி

செய்முறை:

மேற்கண்ட பொருட்களில் அரிசி மற்றும் பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒரு வெள்ளை துணியில் உலர வைக்க வேண்டும்.

அதில் கல்,மண், தூசு ஏதும் இல்லாத படி பார்த்துக் கொள்ளவும்.

அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரிசியை நிறம் மாறும் வரையிலும் பருப்பு வகைகளை பொன்னிறமாகும் வரையிலும் வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த பொருட்களை ஒன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவினை ஒரு சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

காற்று புகாதவாறு ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.

அறை வெப்பநிலையில் ஒரு மாதம் வரையில் வைத்திருக்கலாம்.

feed

குழந்தைக்கு கொடுக்கும் முறை:

இரண்டு ஸ்பூன் மாவினை எடுத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு கட்டிகள் ஏதும் இல்லாதவாறு கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அடுப்பினை குறைந்த தீயில் வைத்து கரைத்த மாவினை நன்கு கிளற வேண்டும்.

சற்றே கெட்டியான பதத்திற்கு வந்த பின்பு அடுப்பினை அணைத்துவிட்டு மாவு ஆறிய பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.

விருப்பப்பட்டால் இந்த மாவினில் வாழைப்பழத்தை மசித்தும் கொடுக்கலாம்.

சுவைக்காக சீனி சேர்ப்பதை அறவே தவிர்த்து விடுங்கள் ஒரு வயது வரை இனிப்பு அல்லது உப்பு ஏதும் சேர்க்கத் தேவையில்லை.

குழந்தைக்கு மூன்று நாட்கள் கொடுத்து பார்த்து அவர்களுக்கு எந்தவித அலர்ஜியும் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து கொடுக்கலாம்.

கடைகளில் விற்கும் செர்லாக்கையே வாங்கலாமே? ஏன் வீட்டில் செய்ய வேண்டும்? என்று கேட்டால்… வீட்டில் செய்யப்படும் இந்த மாவினில்  குழந்தையின் தேவைக்கு ஏற்ப பொருட்களை மாற்றிக் கொள்ளலாம் உதாரணமாக கொண்டைக்கடலையோ அல்லது வேறு சில சிறுதானியங்களையோ சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் சேர்க்கலாம். மேலும் உங்கள் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை சேர்த்துக் கொள்ளாமல் தவிர்க்கவும் முடியும். 

வீட்டிலேயே செய்யும் பொழுது அதில் தேவையில்லாத கெமிக்கலோ அல்லது ப்ரிசர்வேட்டிவ் பொருட்களோ இல்லாத படி தயாரிக்க முடியும்.

அனைத்தையும் விட உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்களே தயாரித்த ஒரு ஆரோக்கியமான உணவினை கொடுக்கும் திருப்தியும் ஏற்படும்.

நல்ல உணவுகளை கொடுத்திட்டு ஆரோக்கியமான வருங்காத்தை உருவாக்கிடலாம்!!!

மேலும் உங்களுக்காக...