இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரின் தாய், பெங்களூர் மெட்ரோவில் பயணம் செய்வது காரில் பயணம் செய்த விட மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, வசதியாக உள்ளது என்று தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜீரோதா என்பதும், இந்த நிறுவனத்தை நிகில் மற்றும் நிதின் காமத் ஆகியோர் நடத்தி வருகின்றனர். மிகவும் பிரபலமான இந்த நிறுவனம், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில், இவர்களின் தாயார் ரேவதி காமத் அவர்களும் இந்திய அளவில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் ஆர்வலர், வீணை வாசிப்பவர் ஆகியவற்றில் ஆர்வமுள்ள இவர் சமீபத்தில் பெங்களூர் மெட்ரோ ரயிலை புகழ்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். “நம்ம மெட்ரோ” அழைக்கப்படும் இந்த மெட்ரோவில் பயணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறிய அவர். பிங்க் நிற உடையில் மெட்ரோவில் நின்று கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
பெங்களூர் மெட்ரோவில் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், குறிப்பாக லேடிஸ் கம்பார்ட்மெண்டில் பயணம் செய்தது உற்சாகத்தை தந்தது என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
பெங்களூர் மட்டுமன்று, மும்பை, டெல்லி, சென்னையிலும் மெட்ரோ பயணம் மிகவும் வசதியாக இருக்கும் என்றும், டிராபிக் பிரச்சனை இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றடையலாம் என்றும் பேருந்து மற்றும் காரில் செல்வதை விட, மெட்ரோவில் செல்வதுதான் வசதி என்றும் பலர் பதிவு செய்துள்ளனர்.
இன்னொருவர் கிண்டலாக, “நீங்கள் பெங்களூர் மெட்ரோவை வாங்குவதற்கு ஏதாவது ஐடியா வைத்திருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ரேவதி காமத் அவர்களுக்கு அவர்களுடைய மகன்கள் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக அளித்தனர். மூன்று மாதங்களுக்கு முன் “எனது மகன்கள் இந்த காரை பரிசாக அளித்தனர்” என்று கூறி அது குறித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். ஆனால் இந்த காரில் பயணம் செய்ததை விட, மெட்ரோவில் பயணம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலராக இருக்கும் ரேவதி காமத், இதுவரை ஒரு லட்சம் மரங்களை நட்டு உள்ளார் என்பதும், கர்நாடக மாநிலம் கனகபுரம் அருகே உள்ள ஒரு ஏரியை அவர் தத்தெடுத்து பராமரிப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஏரியில் அவரது முயற்சியில் சுத்தப்படுத்தப்பட்டது என்பதும், இந்த ஏரி தூர்வாரப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மிகப்பெரிய பயன் அளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி, விவசாயிகளுக்காக அவர் 300 ஆழ்கிணறுகள் மற்றும் 200 திறந்த கிணறுகளையும் சுத்தப்படுத்தி, தூர்வாரி, அந்த பகுதி மக்களுக்கு உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
