இந்தியாவையே உலுக்கிய கோர சம்பவமான வயநாடு நிலச்சரிவு பேரழிவு நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தோண்டத் தோண்ட பிணங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதுவரை 340-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த 29-ம் தேதி அதிகாலை 2மணிக்கு கனமழையுடன் ஏற்பட்ட நிலச்சரிவு விடியும் போது கோர துயர சம்பவமாக மாறியது. உடனே மீட்புப் படையினர் விரைந்தனர்.
கேரள மாநில அரசும், அண்டை மாநிலங்களும் தங்களது மீட்புப் படையினை அனுப்பி வைத்தன. இறந்தவர்களின் உடல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகிறது. மீட்புப் பணியில் இராணுவமும் ஈடுபட்டு தற்காலிக இரும்புப் பாலம் ஒன்றை அமைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்நிலையில் வயநாடுக்கு உதவிடும்படி கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5கோடி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் சார்பில் கௌதம் அதானி ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கினார் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து ரூ. 1கோடி நிதி வழங்கினார். அதிமுக சார்பிலும் 1 கோடி நிதி வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு சார்பில் ரூ. 10 லட்சம் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து திரைப் பிரபலங்கள் சார்பில் நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம் வழங்கினார். இதனைத் சூர்யா-ஜோதிகா-கார்த்தி ஆகிய மூவரும் ரூ. 50 லட்சமும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ரூ. 25 இலட்சமும், பகத் பாசில்-நஸ்ரியா தம்பதிகள் ரூ. 25 லட்சமும், மம்முட்டி 35 லட்சமும், நடிகை ராஷ்மிகா மந்தனா 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது கேரள மண்ணில் பிறந்து தமிழ்நாட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகள் தங்களது குடும்பம் சார்பாக ரூ. 20 லட்சம் கேரள பேரிடர் நிவாரண நிதியாக அளித்துள்ளனர்.
மேலும் பல்வேறு தரப்பினர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.