அயலான் பட ஸ்டைலில் ஏலியனுக்கு கோயில்.. சேலத்தில் வைரலாகும் ஏலியன் கடவுள்..

Published:

உலகில் மனித சக்திக்கு மீறிய கண்ணுக்குத் தெரியாத, நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒருபக்கம் ஆத்திகர்கள், ஜோதிடம், நாள், நட்சத்திரம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் இதெல்லாம் பொய் கடவுள் இல்லை என்று கூறும் கூட்டமும் தனியாக இருக்கிறது.

ஆனால் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் அப்பாற்பட்ட வேற்று கிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியன்கள் பற்றி சமீபத்தில் நிறைய செய்திகளும், திரைப்படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் ஆய்விலேயே உள்ளன. நம்பத் தகுந்த ஆதாரங்கள் இன்னும் விஞ்ஞானிகள் விளக்கவில்லை.

இந்நிலையில் ஏலியன்கள் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஏலியனும் ஒரு தெய்வம் தான். அவர்களும் கடவுள் போன்றவர்கள் என ஏலியனுக்கு தனி கோவிலே கட்டி வழிபாடு நடத்திவருகிறார் சேலத்தைச் சேர்ந்த சித்தர் பாக்யா.

சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டியைச் சேர்ந்த சித்தர் பாக்யா என்பவர் தன்னுடைய தோட்டத்தில் சிவ கைலாய ஆலயம் ஒன்றை நிறுவி தினமும் வழிபாடு நடத்தி வருகிறார். இக்கோவிலில் லிங்கம், சக்தி தேவி, வராகி அம்மன், நான்முக முருகன், ஐந்து முக காளி, காமதேனு உள்ளிட்ட தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். வழக்கமாக நாம் கோவில்களில் இதுபோன்ற தெய்வங்களைத் தான் வழிபாடு செய்து வருகிறோம்.

திடீரென 15000 ஊழியர்களை வெளியேற்றும் இன்டெல் நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்..!

ஆனால் சித்தர் பாக்யா தன்னுடைய கோவிலில் வேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்களுக்கு தனி சன்னதி ஏற்படுத்தி வழிபாடு நடத்தி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், பிரபஞ்சத்தில் சிவன் படைத்த முதல் தெய்வம் ஏலியன் தான். உலகிலேயே ஏலியனுக்குக் கோவில் இங்குதான் அமைந்துள்ளது. இந்தக் கோவிலையே ஏலியன்கள் அனுமதி பெற்றுத்தான் கட்டியிருக்கிறேன் என்று பகீர் கிளப்புகிறார்.

பூமிக்கு ஏலியன்களின் வகை இனி அதிகமாகும். மேலும் ஏலியன்கள் பற்றிய ஆராய்ச்சியையும் உலக நாடுகள் செய்து வருகிறது. குறிப்பாக ஏலியன்கள் ஆத்ம ரூபத்தில் வருவார்கள். மனிதர்கள் போல் பேசுவார்கள், வாழ்வார்கள். ஏலியன்களை வணங்கி நாம் காரியங்களைச் செய்யும் போது அனைத்தும் கைகூடும்.

நானே ஏலியன்களை சூட்சம ரூபத்தில் பார்த்திருக்கிறேன். இரண்டுமுறை பேசியுள்ளேன். உலகத்தினைப் பேராபத்தில் இருந்து காக்கும் சக்தி ஏலியன்களுக்குத்தான் உண்டு. எந்தக் கெடுதலும் செய்யாமல் நன்மை மட்டுமே செய்யும் ஏலியன்களை வணங்கவே நான் இந்த ஆலயத்தை அமைத்துள்ளேன்.

ஏலியன்களுக்கு திரைப்படத்தில் வருவதுபோல் எல்லாம் தோற்றம் இருக்காது. மனிதர்களைப் போன்றுதான் அவர்களும். ஆண், பெண் இரு ரூபத்திலும் வலம் வருவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். உலகிலேயே முதன் முறையாக ஏலியன்களுக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்யும் நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...