வக்பு வாரியத்தின் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தாஜ்மஹாலை வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிப்பதற்கான நீண்ட கால நீதிமன்றப் போராட்டத்தின் முடிவை நாமும் காணலாம்.
இந்தியாவின் முக்கிய வரலாற்று சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹால், உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்றும், இந்திய தொல்லியல் ஆய்வு சங்கத்தின் (ASI) கட்டுப்பாட்டிலுள்ள அதனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 1998 ஆம் ஆண்டு இர்ஃபான் பெதார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், தாஜ்மஹாலை பராமரிக்க தனக்கு உரிமை உண்டு என்றும், அதற்காக உத்தரவிடுமாறு மனுவில் கேட்டு கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு தாஜ்மஹாலை ஒரு வக்பு சொத்தாக பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறும் போது, தாஜ்மஹாலை வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிப்பதற்கான ஆதார ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில், திடீரென ஷியா முஸ்லிம் தலைவர் ஒருவர், ஷியா சமூகத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், மும்தாஜ் ஒரு ஷியா முஸ்லிம் என்றும், அவருடைய உண்மையான பெயர் “அர்ஜுமன் பானோ” என்றும் கூறினார். மேலும், தாஜ்மஹால் கட்டிடக்கலையும் ஷியா மரபுகளுடன் தொடர்பு கொண்டது என்றும் உரிமைக் கோரிக்கை வைத்தார்.
ஆனால், உச்ச நீதிமன்றம் வக்பு வாரியத்தின் உரிமைக் கோரிக்கையை நிராகரித்தது. தாஜ்மஹாலை வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டுமென்றால், அதன் அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற விசாரணையின் போது, “தாஜ்மஹால் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று இந்தியாவில் யார் ஒப்புக் கொள்வார்கள்? 250 ஆண்டுகளுக்கு மேலாக இது கிழக்கு இந்தியா கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பிறகு, மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. தற்போது, இது இந்திய தொல்லியல் துறையின் மேற்பார்வையில் உள்ளது. எனவே, சரியான ஆவணங்கள் இல்லாமல், தாஜ்மஹாலை வக்பு சொத்து என்று அறிவிக்க முடியாது.” என்று நீதிபதிகள் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, தாஜ்மஹால் வக்பு வாரியத்தின் சொத்து என்பதற்கான ஆவணங்களை தேடி வருவதாக அந்த வாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வாரியத்திற்குச் சொந்தமான சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், தாஜ்மஹால் வக்பு வாரியத்தின் சொத்து என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்குமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டியதாக இருக்கும்.