ரயிலில் மிடில் ஃபர்த் அறுந்து விழுந்து பயணி இறந்த விவகாரத்தில் ட்விஸ்ட்.. ரயில்வே தந்த விளக்கம்

By Keerthana

Published:

டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் ஓடும் ரயிலில் மிடில் பர்த் அறுந்து விழுந்ததில் லோயர் பர்த்தில் படுத்திருந்த கேரள பயணி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்த 62 வயதாகும் முதியவர் மரத்திகா அலிகான் கடந்த வாரம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயிலில் பயணித்திருக்கிறார். அவர் சென்ற ரயில் அடுத்தத்து மாநிலங்களை கடந்து தெலுங்கானா மாநிலத்தில் பயணித்து கொண்டிருந்தது. அவருக்கு ரயிலில் கீழ் இருக்கை (லோயர் பெர்த்) ஒதுக்கப்பட்டிருந்தது. இரவு உணவை முடித்துக்கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மரத்திகா அலிகான் படுத்து தூங்கி கொண்டிருந்தார்

ரயில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராதாவிதமாக மரத்திகா அலிகான் படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தானது உடைந்து அவர் மேல் பயங்கரமாக விழுந்தது. இதில் இவருக்கு கழுத்து எலும்புகள் உடைந்து படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட ரயில்வே மீட்பு படையினர் வாரங்கலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள கிங்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு கழுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மரத்திகா அலிகான் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் அறுந்து விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து லோயர் பெர்த்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது, “அலிகான் மீது விழுந்த இருக்கையை ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்ததில் அது நல்ல நிலையில் இருப்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

மேலும், நடு படுக்கை உடைந்து விழவில்லை. மற்றொரு பயணி சரியாக சங்கிலியில் மாட்டாமல் சென்றதாலயே அது கீழே விழுந்தது. இதனாலேயே, கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்தார். இதையடுத்து சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்திய ரயில்வே தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.