உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆயுதப்படை காவலர் ஒருவர் தாமதமாக பணிக்கு வந்ததற்குக் காரணமாக, “தன்னுடைய மனைவி கனவில் வந்து தன்னை தூக்கிப்போட்டு மிதிக்கிறார். இதனால், தன்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. அதனால் தான் காலை தாமதமாக வருகிறேன்,” என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உபி மாநிலத்தை சேர்ந்த மதுசூதன் சர்மா என்பவர் அடிக்கடி பணிக்கு தாமதமாக வருவதையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்றபோது, அவர் தனது திருமண வாழ்க்கை பிரச்சனையாக உள்ளது என்றும், தன் மனைவி தனக்கு நேரில் மட்டுமின்றி கனவிலும் வந்து தூக்கிப் போட்டு மிதிக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும், “என் ரத்தத்தை குடிக்க முயற்சிக்கிறார்” என்றும் தெரிவித்தார்.
இதன் காரணமாக இரவில் சரியாக தூங்க முடியாததால், காலையில் தாமதமாக எழுந்து பணிக்கு வர காலதாமதம் ஆகிவிடுகிறது என்றும் கூறினார். மேலும், தனக்கு மன அழுத்தம் மற்றும் சில நோய்கள் இருப்பதால் மருந்து எடுத்துக் கொள்கிறேன் என்றும், தனது தாயாரும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் மனவேதனைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், “எனக்கு இந்த பணி பிடிக்கவில்லை. கடவுளின் பாதத்தில் சரணடைய ஆன்மீகப் பாதையை நோக்கிச் செல்ல விரும்புகிறேன். எனவே, என்னை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பதில், உயர் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
