பெங்களூரு பி.டி.எம் லேஅவுட் 2வது கட்டத்தில் உள்ள என்.எஸ். பால்யா அருகே, கனமழையின்போது வெள்ளத்தில் மின்சார உபகரணங்கள் மூழ்கியதால், மன்மோகன் காமத் மற்றும் தினேஷ் என்ற இரு பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள்.
இந்த நிகழ்வை தொடர்ந்து, மாநில துணை முதல்வர் மற்றும் பெங்களூரு மேம்பாட்டு துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார், மாநகராட்சி அதிகாரிகளுடன் அந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர், குறைந்த நிலப்பரப்பில் இருக்கும் பகுதிகளில் பார்கிங் கேலரிகள் கட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என கூறினார். இதற்காக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தார்.
“மழைக்காலத்தில் பார்கிங் கேலரிகள் உயிரிழக்கும் இடங்களாக மாறிவிட்டன,” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தீவிரமழை ஏற்பட்டாலோ, வெள்ளம் சூழும் பகுதிகளிலோ பார்கிங் மாடிகளை முதல் மாடிக்கு மாற்றும் வகையில் சட்டம் தயாரிக்க உத்தரவு அளித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“அடித்தளத்தில் வைக்கப்படும் மின்சார உபகரணங்கள் அபாயகரமான சூழ்நிலைகளை ஏற்படுத்துகின்றன. ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் முன்னர் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன,” என்றும் அவர் கூறினார்.
உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், மாடுகள் போன்ற உயிரின இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்தார்.
மேலும் இதுவரை 144 அபாயகரமான மின்பாயும் இடங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் இன்னும் சிக்கல் உள்ளது. ஆனால் அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் துணை முதல்வர் கூறினார்.
மழையால் பெங்களூரு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து சமூக ஊடகங்களில் செய்யப்பட்ட விமர்சனங்கள் மற்றும் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சிவக்குமார், “பெங்களூருவை இழிவுபடுத்தும் மக்கள் ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும், நீங்கள் இழிவுபடுத்துவது நம்மை அல்ல, நம நகரத்தை என்றார். பா.ஜ.க பேசட்டும் நாங்கள் முடிவுகளை நோக்கி செல்வோம்,” என உறுதியாக பதிலளித்தார்.