புதிதாக வேலையில் சேருவோருக்கு முதல் மாதம் டபுள் சம்பளம்.. நிர்மலா சீதாராமன் அறிவிபப்பு

Published:

டெல்லி: இபிஎப்ஓவில் பதிவு செய்யப்படும் புதிய பணியாளர்களுக்கு 15000 வரை ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் . இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ளது. இதையடுத்து புதிய அரசு இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் இந்தியாவுக்கான ஒரு பெரிய வேலை வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிதியாண்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இதேபோல் அடுத்த ஆண்டில் வேலைவாய்ப்பு தொடர்பான மூன்று திட்டங்களை அரசு தொடங்கும் என்றும் கூறினார்.

அதில் முக்கிய நடவடிக்கையாக, புதிதாக வேலையில் சேரும் 30 லட்சம் இளைஞர்களுக்கு 1 மாத பிஎஃப் பங்களிப்பை வழங்குவதன் மூலம் அரசாங்கம் ஊக்கத்தொகையை வழங்கும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்படி இபிஎப்ஓவில் பதிவு செய்யப்டும் அனைத்து முறையான துறைகளிலும் பணிபுரியும் முதல் முறையாக பணிபுரிபவர்கள் ஒரு மாத ஊதியத்தைப் பெறுவார்கள்.

ஒரு மாத சம்பளம், 15,000 ரூபாய் வரை நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூன்று தவணைகளில் வழங்கப்படும். ஒரு மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெறுவோருக்கு இந்த தகுதி உடையவர்கள் ஆவார். மேலும் இதன் மூலம் 2.1 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

இதேபோல் இனி ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் இபிஎப்ஓ ​​பங்களிப்புக்காக அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முதலாளிகளுக்கு மாதம் ரூ 3,000 வரை திருப்பிச் செலுத்தும் என்றும், இந்த முயற்சி 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் வேலைக்கு போகும் பெண்களுக்கு தங்கும் விடுதிகளை அமைக்கப்படும் என்றும் கூறினார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான ஒரு பெரிய ஊக்கம் தரும் விஷயங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள், 2024 நிதியாண்டில் 6% ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் கடந்த நிதியாண்டில் இது 3.2% ஆக மட்டுமே இருந்தது.

மேலும் உங்களுக்காக...