உங்கள் வீட்டு மின் கட்டணத்தை இனி அடியோடு குறைக்கலாம்.. பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த சூப்பர் திட்டம்

Published:

டெல்லி: மத்திய பட்ஜெட் 2024ல் மின் கட்டணத்தை மக்கள் குறைத்துக் கொள்ளும் விதமாக சோலார் பேனல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மின் கட்டணம் இனி ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அதிகரிக்க போகும் நிலையில் மத்திய அரசின் சோலார் திட்டம் நிச்சயம் பெரிய உதவியமாக மக்களுக்கு இருக்கும்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், நாட்டில் 1 கோடி வீடுகளுக்கு சோலார் பேனல்களை நிறுவுவதற்கான பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா விரிவுப்படுத்தி உள்ளார். இத்திட்டம் ஏற்கனவே 1.28 கோடி பதிவுகள் மற்றும் 14 லட்சம் விண்ணப்பங்களுடன் வரவேற்பைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்திற்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடுகளுக்கு சூரிய மின்சக்தி பயன்படுத்தும் சோலார் பேனல்களை தேவைப்படி நிறுவுவதன் மூலம் கணிசமான நிதி நிவாரணம் மின் நுகர்வோருக்கும் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரைகளில் நிறுவப்பட்ட ஒளிமின்னழுத்த பேனல்கள் கிரிட் மின்சாரத்தை நம்பியிருப்பதைக் குறைப்பது மட்டுமின்றி, உபரி மின் ஆற்றலை உற்பத்தி செய்து அதனை மின்வாரியத்திற்கு விற்பனை செய்வதற்கும் உதவும். இதன் மூலம் மின் கட்டணத்தை மின் உற்பத்தியை வைத்து ஈடு செய்து கணிசமான மின் கட்டணத்தை மக்கள் சேமிக்க முடியும்.

அதேநேரம் மின்சாரம் இல்லாத நிலை என்பது இல்லாத அளவிற்கு வீடுகள் மாறும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை மின் நுகர்வோர்கள் சேமிக்க வாய்ப்பு உள்ளது. பெரிய நுகர்வோர்கள் இதைவிடவும் அதிகமாக சேமிக்கவும் முடியும். அதேநேரம் மின்கட்டணம் கண்டிப்பாக அடியோடு குறையவும் வாய்ப்பு உள்ளது. 2 லட்சம் அளவிற்கு மின் கட்டணம் செலுத்துவோருக்கு சில ஆயிரங்களே வரும் என்கிற நிலைக்கூட ஏற்படும். எதிர்காலத்தில் மின் கட்டணத்தை கணிசமாக குறைக்கவும் உதவும்.

வீடுகளின் உரிமையாளர்கள் சூரிய மின் கூரைகளை அமைக்க மத்திய அரசு மேற்கூரை சோலார் திட்டம் கட்டம்-II-ன் கீழ் ஒரு கிலோவாட்டிற்கு ரூ.9,000 முதல் ரூ.18,000 வரை மானியம் தருகிறது. கூடுதலாக, 3KW முதல் 5KW வரையிலான அமைப்பிற்கு ரூ. 2.20 லட்சம் முதல் ரூ. 3.5 லட்சம் வரையிலான நிறுவல் செலவு போன்றவற்றை எளிய தவணை வசதி கடன் மூலம் சரி செய்ய முடியும். அடுத்த ஐந்தாண்டுகளில் 40 ஜிகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை மத்திய அரசு இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது

மேலும் உங்களுக்காக...