இந்திய ரிசர்வ் வங்கி மகாத்மா காந்தி படத்துடன் புதிய ரூ.20 மதிப்புள்ள ரூபாய் நோட்டை விரைவில் வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில் தற்போது பதவி வகிக்கின்ற ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்வோத்ராவின் கையொப்பம் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விளக்கத்தில், புதிய ரூ.20 காசோலைகளின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள், தற்போதைய மகாத்மா காந்தி நோட்டுகளின் அம்சங்களோடு ஒரே மாதிரியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வண்ணம், அளவுகள், பாதுகாப்பு அம்சங்கள், பின்னணியில் உள்ள எல்லோரா மலைக்குகைகள் பிம்பம் ஆகிய அனைத்தும் மாறாதவையாக இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் தற்போதைய புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்வோத்ரா அவர்கள் கையொப்பம் ஒன்று தான் மாறுபட்டது. மற்றாபடி புதிய ரூ.20 நோட்டில் எந்த வேறுபாடுமின்றி இருக்கும்,” என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட எல்லா ரூ.20 நோட்டுக்களும், எந்த ஆளுநரின் கையொப்பமிருந்தாலும் அவை செல்லுபடியாகும் என்றும், பரிவர்த்தனைகளுக்கு முழுமையாக பயனுள்ளதாகவே இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது.
புதிய ஆளுநர் பொறுப்பேற்கும் போது அவரின் கையொப்பத்துடன் புதிய நோட்டுகளை வெளியிடுவது, இயல்பான நடைமுறையாகும்.
இந்த புதிய மாற்றம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தற்போது வைத்திருக்கும் ரூ.20 நோட்டுக்கள் எப்போதும் போல் செல்லுபடியாகும். புதிய ஆளுநர் பதவியேற்றதன் காரணமாகத்தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. எனவே, உங்கள் பழைய நோட்டுகளை எந்த தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
RBI, பாதுகாப்பு காரணங்களுக்கும், நோட்டுகளின் தரத்தை மேம்படுத்தவும் அவ்வப்போது நோட்டுகளில் மாற்றங்களை கொண்டு வருகிறது. ஆனால், பழைய நோட்டுகள் எப்போதும் செல்லுபடியாகவே இருக்கும். எனவே, இந்த விஷயத்தில் எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.