அதானி கையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்.. 20 மில்லியன் பயணிகள்.. ரூ.16000 கோடி உள்கட்டமைப்பு..!

  நவி மும்பையில் புதிதாக சர்வதேச உலக தரத்துடன் ஒரு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் அதானி  தலைமையிலான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை…

கவுதம் அதானி

 

நவி மும்பையில் புதிதாக சர்வதேச உலக தரத்துடன் ஒரு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் அதானி  தலைமையிலான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையம், 16 ஆயிரம் கோடி மதிப்புள்ள உலக தர உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் கொண்டு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அதானி குழும தலைவர் கௌதம் அதானி செய்தியாளர்களிடம் பேசிய போது, “நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று பார்வையிட்டேன். உலகத்தரமான விமான நிலையம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் மாதம் இந்த விமான நிலையம் திறக்கப்படும் போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைப்பு மற்றும் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கும். மொத்த வருமானத்திலும் இந்த விமான நிலையம் முக்கிய இடம் பெறும். இது இந்தியாவுக்கு கிடைத்த உண்மையான பரிசு,” என்று தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நவி மும்பை விமான நிலைய பணிகளை தொடங்கப்பட்ட நிலையில், இது ஒரு பசுமை புறநகர் விமான நிலையமாக உருவாக்க திட்டமிடப்பட்டது. இரண்டு ஓடுபாதைகள் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் புறப்படவும் தரையிறங்கவும் அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், ஒவ்வொரு ஆண்டும் 90 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், ஆரம்ப கட்டத்தில் 20 மில்லியன் பயணிகள் மற்றும் வருடத்திற்கு 8 லட்சம் டன் சரக்குகளை கையாளும் திறனை கொண்டதாக அமையும் என்றும் கூறப்படுகிறது. 3700 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையை கொண்டிருப்பதால், பெரிய அளவிலான வணிக விமானங்களையும் இந்த விமான நிலையத்தில் தரையிறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அகமதாபாத், மங்களூர், ஜெய்பூர், திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் அதானி குழுமத்தின் மேலாண்மையில் இருக்கும் நிலையில், தற்போது நவீன் மும்பையின் புதிய சர்வதேச விமான நிலையமும் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.