மத்திய பிரதேசத்தின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எடுத்த பதிலடி குறித்து பேசும் போது, “அவர்களது சமூகத்தை சேர்ந்த ஒரு சகோதரியை அனுப்பி பதிலடி கொடுத்தோம்” என்ற கூறியது கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நேரடியாக யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடப்படாதபோதும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது ஊடக சந்திப்பில் பங்கேற்ற கர்னல் சோஃபியா குரேஷியை தான் அவரது வார்த்தைகள் குறிப்பிட்டதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மாஹுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குன்வர் விஜய் ஷா பேசியபோது, ‘எங்கள் மகள்களின் சிந்தூரை அழித்தவர்களுக்கு பிரதமர் மோடி அவர்களே பதிலடி கொடுத்தார். அவர்களது சமூகத்தை சேர்ந்த சகோதரியை அனுப்பி, நாங்கள் அவர்களுக்கு பாடம் புகட்டினோம்.” என்று பேசினார்.
அதன்பின் அவரது பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளானவுடன், ‘எனது பேச்சை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். அந்த யுத்தத்தில் வீராங்கனையாக செயல்பட்டவர்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் நமது நாட்டின் சகோதரிகள், அவர்களது பங்களிப்பு பெருமைக்குரியது’ என்றார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் குன்வர் விஜய் ஷா பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபினவ் பரோலியா கூறியதாவது:
“இந்தியாவின் மகள்களை, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பயங்கரவாதிகளின் சகோதரிகள் என்றும் ஒரு அமைச்சர் பேசுவது வெட்கக் கேடான விஷயம். இது இந்திய ராணுவத்தையே அவமதிக்கும் செயல்.” என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்து, அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் கூறியதாவது: “இந்திய ராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வீர மகளான கர்னல் சோஃபியா குரேஷி பற்றி, அமைச்சர் குன்வர் விஜய் ஷா கூறிய வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமானதும், இழிவானதும். இது பெண்களை மட்டும் அல்ல, ராணுவத்தையும் அவமதிக்கும் செயல்.” என்றார்.
குன்வர் விஜய் ஷாவுக்கு இது முதல் சர்ச்சை அல்ல. 2013ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மனைவியை பற்றி தவறான கருத்து தெரிவித்ததாக கூறி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
