சமூக வலைத் தளங்களை எடுத்துக் கொண்டாலே நாம் நாள் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்களை கவனித்திருப்போம். இதில் சிலர் வெறுமனே ஏதாவது வார்த்தைகளை பேசியோ அல்லது வேடிக்கையான சம்பவங்களை செய்தோ வீடியோக்களை பகிரும் போது திடீரென அவை மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து வைரலாகவும் செய்யும்.
அந்த வீடியோவிற்கு அப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என அதை பதிவு செய்தவர் கூட நிச்சயம் எதிர்பார்க்க மாட்டார்கள். இப்படி ஏராளமான வீடியோக்கள் இன்ஸ்டா, பேஸ்புக் மற்றும் யூடியூப் என அனைத்திலும் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சக்கை போடு போட்டு வரும் நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த சம்பவத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.
55 கோடி பார்வையாளர்கள்
இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் பார்வையாளர்களை ஒரு வீடியோ கடந்தாலே அது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் தான் கேரள வாலிபரான முகமது ரிஸ்வான், கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பகிர்ந்த வீடியோ ஒன்று 55 கோடி பார்வையாளர்களை இன்ஸ்டாகிராமில் கடந்துள்ளது.
இதுநாள் வரையில் 550 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ள இந்த வீடியோ, அதிக பேரால் இன்ஸ்டாவில் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை பெற்றும் விளங்கி வருகிறது. இதற்காக சமீபத்தில் முகமது ரிஸ்வானுக்கு கின்னஸ் உலக சாதனை விருதும் கிடைத்திருந்தது. கால்பந்து தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் ரிஸ்வான், கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மலப்புரத்தில் உள்ள கேரளங்குண்டு அருவியில் கால்பந்து தொடர்பான வீடியோவை எடுத்து பகிர்ந்திருந்தார்.
கேரளா வாலிபரின் சாதனை
இந்த வீடியோவில் மலைக்கு நடுவே அருவி பாய்ந்து கொண்டிருக்க அதன் கரையில் நின்று கால்பந்தை எட்டி உதைக்கிறார் ரிஸ்வான். வேகமாக செல்லும் அந்த பந்து பாறைக்கு நடுவே முட்டி நேராக தண்ணீரிலும் இருந்து கீழே விழுகிறது. கால்பந்து விளையாட்டு மீது விருப்பம் இல்லாதவர்களுக்கும் கூட இந்த வீடியோ பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்த 92 லட்சம் மக்கள் லைக்கையும், 42,000 பேர் கமெண்ட்டும் செய்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வரும் நிலையில் அதில் பகிரப்பட்ட வீடியோவில் அதிகம் பேர் பார்த்த வீடியோவாக இந்தியாவை சேர்ந்த ஒருவர் வீடியோ இருப்பது பலரையும் தலை நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது.