குஜராத்தின் காந்தி நகரில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் குறித்த சர்தார் வல்லபாய் பட்டேலின் நிலை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது என கூறினார்.
இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றுபட்ட நாடாக உருவாக செய்த தலைவராக சர்தார் வல்லபாய் பட்டேல் இருந்தார் என்றும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்வரை இராணுவ நடவடிக்கையை நிறுத்தக்கூடாது என்றே அவர் எண்ணியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் அவரின் ஆலோசனையை அன்றைய ஆட்சியாளர்கள் புறக்கணித்துவிட்டனர் என அவர் சாடினார்.
“1947-இல் பாரத மாதா பிளவுபட்ட போது, சங்கிலிகள் வெட்டப்பட வேண்டிய நேரத்தில், கைகள் வெட்டப்பட்டன. அதே இரவில் காஷ்மீரில் முதல் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. பாகிஸ்தான், முஜாஹித்தீன் பெயரில் பயங்கரவாதிகளை பயன்படுத்தி, பாரத மாதாவின் ஒரு பகுதியை கைப்பற்றியது. அந்த பயங்கரவாதிகளை அப்போதே ஒழித்திருந்தால், இன்றைய நிலை மாறியிருக்கும் என மோடி வலியுறுத்தினார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்டெடுக்கும்வரை இந்திய இராணுவம் நின்றுவிடக்கூடாது என்பதே சர்தார் பட்டேலின் விருப்பம். ஆனால் அவருடைய பேச்சை யாரும் கேட்கவில்லை. அதன் விளைவாக 75 ஆண்டுகளாக நாம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகிறோம். பஹல்காம் தாக்குதலும் இதே தொடர்ச்சியின் ஒரு பகுதியாகும்” என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பாகிஸ்தானை குறிவைத்து மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி கூறியதாவது: “உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், ஒரே ஒரு முள் குத்தினாலே சிரமப்படுவோம். அந்த முட்களை இப்போது முற்றிலும் நீக்க முடிவு செய்துள்ளோம்.”