உலக அளவில் பிரபலமான Lloyds வங்கி, பிரிட்டனைச் சேர்ந்த 6000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 4000 இந்தியர்களை புதிதாக வேலைக்கு சேர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் 4000 தொழில்நுட்ப மற்றும் டேட்டா துறையில் பணியாளர்களை அமர்த்த Lloyds வங்கி திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் அந்த வங்கியில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்களாகவே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி, ஹைதராபாத்தில் உள்ள Lloyds வங்கி கிளைகளில் பொறியாளர்கள், கிளவுட் பொறியாளர்கள் உள்பட உயர் பதவிகளில் பணியாளர்கள் அமைக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒரு புறம் பணியாளர்களை சேர்க்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ள Lloyds வங்கி, பிரிட்டனில் உள்ள 6000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை லாயிட்ஸ் வங்கி வெளியிடவில்லை என்றாலும், ஏராளமான பிரிட்டனியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறப்படுகிறது. பல ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படலாம், சிலர் வேறு பணிக்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து வங்கி தலைமை செயல்பாட்டு அதிகாரி கடந்த மாதம் பணியாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த தொழிற்சங்கம் இந்த நடவடிக்கையை மிகப்பெரிய அளவில் எதிர்த்துவருகிறது. Lloyds வங்கி பிரிட்டனை வளர்ப்பதற்காக செயல்பட வேண்டும் என்றும், உள்நாட்டு ஐடி நிபுணர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
ஆனால் இந்தியாவில் வேலை அமர்த்தும் பணி தொடங்கிவிட்டதாகவும், 4000 புதிய இந்தியர்களை வேலைக்கு எடுப்பது உறுதியாக உள்ளது எனக் கூறப்படுகிறது. இந்தியர்களின் திறமைக்கு மதிப்பளித்து அவர்களை தேர்வு செய்யும் Lloyds வங்கியின் முடிவுக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.