பெங்களூர்: நிலப்பிரச்சனை தொடர்பாக வந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரலான நிலையில், கைதான துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் போலீசார் துமகூரு சிறையில் அடைத்தனர்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமசந்திரப்பா (வயது 50). இவர் மதுகிரி போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதாவது நிலப்பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி வந்த பெண்ணை ராமசந்திரப்பா தனது வலையில் விழ வைத்து, உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ராமசந்திரப்பாவை பணியிடை நீக்கம் செய்து கர்நாடகா மாநில டி.ஜி.பி. அலோக் மோகன் அதிரடி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மதுகிரி போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தனர், அவர் மீது பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இது தொடர்பாக ராமசந்திரப்பா கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று ராமசந்திரப்பாவை போலீசார் மதுகிரியில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது போலீசார் தரப்பில் ராமசந்திரப்பாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ராமசந்திரப்பாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று துமகூரு சிறையில் அடைத்தனர்.