குறிப்பாக, குறைந்த சம்பளத்தில் ஐடி துறையில் சிறிய பணிகளை செய்து வரும் ஊழியர்களுக்கு வேலை ஆபத்தாக உள்ளதாம். அனுபவம் குறைந்த மென்பொருள் புரோகிராமர்கள் வேலையை AI கருவிகள் மிக எளிதாகவே வேலைகளை செய்து விடுவதால், அவர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ஊழியர்களே ‘பேயிங் கெஸ்ட்’ என அழைக்கப்படும் PG அறைகளில் தங்கி இருந்தார்கள். ஆனால் அவர்கள் வேலை இழந்தால், பெங்களூரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இதனால், பேயிங் கெஸ்ட் வருமானம் மட்டுமின்றி, உள்ளூர் ஹோட்டல் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஐடி தொழிலாளர்களிடமிருந்து நீண்ட கால வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, பெரும் முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் வேலைவாய்ப்பு குறையும் நிலையில், பலர் வேறு நகரங்களுக்கு செல்ல நேரிடலாம். இதன் விளைவாக, பெங்களூரில் வீடுகளின் மதிப்பு குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், பெங்களூர் அவுட்டர் ரிங் ரோட்டில், பெரிய பெரிய ஐடி நிறுவனங்களுக்காக பல அலுவலகங்கள் கட்டப்பட்டன. இதனால், ரியல் எஸ்டேட் துறையினர் மிகப்பெரிய வாடகை வருமானம் பெற்று வந்தனர். ஆனால் தற்போது, சில ஐடி நிறுவனங்கள் தங்களது செயல் திட்டங்களை மாற்றி அமைப்பதால், வாடகை வருவாய் குறையும் நிலை உருவாகியுள்ளது.
ஒரு காலத்தில் பெங்களூரில் வீடு வாங்குவது, ஒத்திக்கு பெறுவது, வாடகைக்கு கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக இருந்த நிலையில், தற்போது அதிக வீடுகள் காலியாக உள்ளன. இது வேலை இழப்பு நடவடிக்கையின் விளைவாக உள்ளது. பல்வேறு நிபந்தனைகளை விதித்து கெத்து காட்டிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள், தற்போது கடுமையான சூழ்நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.