அசாம் மாநில காவல்துறையினர் அண்மையில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ‘இமாம் மஹ்மூத் கலிஃபா’ எனும் பயங்கரவாத அமைப்பின் புதிய பகுதியை கண்டறிந்து முறியடித்துள்ளனர். டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அசாம், மேகாலயா மற்றும் எல்லை பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில், இந்தியாவிற்குள் ஒரு புதிய பயங்கரவாத வலையமைப்பை உருவாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அசாம் பிரிவு தலைவனாக செயல்பட்ட நசிமுதீன் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2018-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ‘ஜமாத்-உல்-முஜாஹிதின் பங்களாதேஷ்’ அமைப்பின் ஒரு கிளை அமைப்பாகும். ‘கஸ்வத்துல் ஹிந்த்’ எனும் அபாயகரமான சித்தாந்தத்தை பரப்பி, இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துவதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.
இந்த அமைப்பின் செயல்பாடுகள் வெறும் ஆள் சேர்ப்போடு மட்டும் நின்றுவிடாமல், மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு வரைபடத்தின் அடிப்படையில் இயங்கியுள்ளன. 2024 ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அங்கிருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரமான சூழலை இவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
வங்கதேசத்தை சேர்ந்த உமர் மற்றும் காலித் ஆகிய ஹேண்ட்லர்களின் வழிகாட்டுதலின்படி, அசாம் மற்றும் மேகாலயா பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து இந்த அமைப்பில் இணைக்கும் பணிகள் நடந்துள்ளன. குறிப்பாக, வேலைக்காக வங்கதேசம் சென்று வரும் இந்திய முஸ்லிம்களை இவர்கள் இலக்காக கொண்டு, அவர்களை தீவிரவாத பாதைக்கு திருப்ப முயன்று வந்துள்ளனர்.
இதற்காக ‘பூர்வா ஆகாஷ்’ எனப்படும் மறையாக்கம் செய்யப்பட்ட ஒரு செயலியை இவர்கள் தொடர்பு சாதனமாக பயன்படுத்தியுள்ளனர். இது ஒரு ‘டிஜிட்டல் மதரஸா’ போல செயல்பட்டு, ஆன்லைன் மூலம் தீவிரவாத கருத்துகளை பரப்புவதற்கும், பயிற்சியளிப்பதற்கும் உதவியுள்ளது. இந்த செயலியின் மூலம் இந்திய நிலப்பரப்பு மற்றும் முக்கிய இடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ‘பாயத்’ எனப்படும் உறுதிமொழி வீடியோக்களை இவர்கள் எடுத்துள்ளனர். இது அந்த அமைப்பின் மீதான விசுவாசத்தை உறுதிப்படுத்துவதோடு, பிடிபடும்போது உறுப்பினர்களை பிளாக்மெயில் செய்யவும் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நசிமுதீன் மற்றும் சித்திக் அலி ஆகியோர் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் மேகாலயாவிற்கு பயணம் செய்து வங்கதேச கூட்டாளிகளை சந்தித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேகாலயா மாநிலம் பொதுவாக இத்தகைய கண்காணிப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு போக்குவரத்து பாதையாக இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நிதி பரிவர்த்தனைகளை பொறுத்தவரை, இவர்கள் ஹவாலா முறையை பயன்படுத்தியதோடு, கண்காணிப்பில் இருந்து தப்பிக்க சிறிய தொகைகளாக யூபிஐ மூலமும் பண பரிமாற்றம் செய்துள்ளனர். டிசம்பர் 28, 2024 அன்று பர்பேட்டா பகுதியில் நடைபெற்ற ரகசிய கூட்டத்திற்கு பிறகே, இவர்களின் நடமாட்டத்தை கண்டறிந்த உளவுத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த அமைப்பின் திட்டங்கள் இரண்டு நிலைகளில் வகுக்கப்பட்டிருந்தன. முதற்கட்டத்தில், காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கும் நபர்களை அச்சுறுத்துவது மற்றும் தீவிரவாத கருத்துகளுக்கு எதிராக இருக்கும் மத தலைவர்களை ஓரம் கட்டுவது போன்ற வேலைகளை செய்ய திட்டமிட்டிருந்தனர். இரண்டாம் கட்டத்தில், ரயில்வே மற்றும் போக்குவரத்து தடங்களை சேதப்படுத்துவது மற்றும் அரசு அலுவலகங்களை இலக்காக கொண்டு தாக்குதல்களை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதே இவர்களின் லட்சியமாக இருந்தது. குறிப்பாக, வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு அசாம் மாநிலத்தை சீர்குலைக்க இவர்கள் பெரிய அளவில் சதி செய்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்த அதிரடி சோதனையில் நசிமுதீன், ஜுனைப் அலி, அராஹிம் உசேன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டாலும், இந்த அமைப்பின் ‘மிரர் குரூப்ஸ்’ எனப்படும் மாற்று தகவல் தொடர்பு வழிகள் இப்போதும் செயல்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விழிப்புடன் உள்ளனர். எல்லையோர பகுதிகளில் நிலவும் இத்தகைய தேச விரோத சக்திகளின் ஊடுருவலை தடுக்க மாநில மற்றும் மத்திய உளவு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இத்தகைய ஆன்லைன் தீவிரவாத போக்குகளை கட்டுப்படுத்த புதிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்புகள் அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
