சீனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட வர்த்தகம் தற்போது புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தத்தளிக்கும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளன. இதனால், இருபுறமும் விதித்திருந்த வரி விகிதங்கள் 115 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. எனவே வழக்கம்போல் $660 பில்லியன் மதிப்பிலான வர்த்தகம் மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது.
Global Trade Research Initiative (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா இதுகுறித்து கூறுகையில், சீனாவுடன் ஏற்பட்ட வரிவிகித குறைவால், இந்தியா, வியட்நாம், மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு செல்ல காத்திருந்த நிறுவனங்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, சீனாவை நோக்கி விதித்திருந்த 145% வரியை 30% ஆகக் குறைத்துள்ளது. அதே நேரத்தில், சீனாவும் 125% வரியை 10% ஆக குறைத்துள்ளது. இது இந்தியாவுக்கான போட்டி வாய்ப்பை குறைத்துவிட்டது.
ஆட்டோமேட்டிவ், ஸ்டீல் போன்ற துறைகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. மேலும், சீனாவுக்கான 20% ஃபென்டனில் வரி தொடர்கிறது.
EEPC India தலைவர் பங்கஜ் சடா கூறுகையில், சீனா தனது முந்தைய வர்த்தகத்தை மீண்டும் பெற்றுவிடும். எனவே இப்போது இந்தியா வெற்றியடையக்கூடிய துறைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, ஆட்டோ உதிரிபாகங்கள், ஸ்டீல் பொருட்கள் போன்றவை,” எனத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட ஒப்பந்தம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா விரைவில் ஒரு ஒப்பந்தத்தை தீர்க்கமாக பேசி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம் என்ற பழமொழி போல் அமெரிக்காவை எதிர்க்க இந்தியாவுடன் கைகோர்ப்பதற்கு பதிலாக அமெரிக்காவிடமே சரணம் அடைந்து விடலாம் என்று சீனா முடிவு செய்துள்ளது. அதேபோல் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பதால் இந்தியா மீது அமெரிக்காவுக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
எனவே தான் தற்போது இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை பிடித்து விடும் என்பதால் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கா மற்றும் சீனா தற்போது தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து கைகோர்த்து இருக்கலாம் என்றும் வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் தான் இந்தியா மிகவும் கவனமாக அடுத்தடுத்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா மற்றும் சீனா துணை இல்லாமல் தங்களால் ஒரு வெற்றிகரமான வர்த்தக நாடாக மாற முடியும் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்