டெல்லியில் இருந்து பாங்காக்குக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI2336-ல் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் விமானம் தரையிறங்கும் சமயத்தில் நடைபெற்றதாகவும், ஏர் இந்தியா இதுகுறித்து டிஜிசிஏவுக்கு புகாரளித்ததாகவும் தகவல் வெளியானது. இந்த புகாரின்படி விமானத்தில் 2D இருக்கையில் பயணித்த துஷார் மசந்த் என்பவர், 1D இருக்கையில் அமர்ந்திருந்த ஹிரோஷி யோஷிசானே என்பவரின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனே ஹிரோஷி விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்தார். உடனே விமானத்தின் சீனியர் கேபின் குழு உறுப்பினர்களான சுன்ப்ரீத் சிங் மற்றும் ரிஷிகா மாத்ரே ஹிரோஷிக்கு மாற்று துணிகள் வழங்கி உதவி செய்ததுடன், துஷார் மசந்த்-ஐ அந்த இடத்திலிருந்து அகற்றினர். மேலும் விமான கேப்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தன் தவறுக்காக மசந்த், ஹிரோஷியிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டதாகவும், அந்த மன்னிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், ஹிரோஷி, தரையிறங்கிய பிறகு நேரம் விரயம் ஆகக்கூடாது என்பதால் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிகிறது. , ஹிரோஷியின் புகார் இல்லாமலேயே, துஷார் மசந்த்-க்கு வாய்மொழி எச்சரிக்கையை விமான நிறுவன அதிகாரிகள் விடுத்தனர். ஒரு பயணி மீது சிறுநீர் கழித்தவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் வாய்மொழி எச்சரிக்கை மட்டும் இட்டது பெரும் விவாத பொருள் ஆகியுள்ளது.
ஏர் இந்தியாவுக்கு இது முதன்முறையல்ல. 2022-ம் ஆண்டு நவம்பரில், நியூயார்க்க்-டெல்லி விமானத்தில், ஒரு பிஸினஸ் கிளாஸ் பயணி வயதான பெண்ணின் மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தில் விமான நிறுவனம் சரியான நடவடிக்கை எடுக்காததால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் டிஜிசிஏ நிறுவனம் விமான நிறுவனத்திற்கு அபராதம் விதித்ததுடன், பைலட்டின் உரிமையும் இடைநிறுத்தப்பட்டது.
அதன் மாதிரி 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் -டெல்லி விமானத்திலும் ஒரு மதுபோதை பயணி காலியாக இருந்த இருக்கை மற்றும் போர்வையின் மீது சிறுநீர் கழித்தார். அவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ச்சியான இத்தகைய சம்பவங்கள் ஏர் இந்தியாவின் மீது கடும் விமர்சனங்களை வரவழைத்து வருகின்றன.