உபியில் பள்ளிக்கு அசைவம் கொண்டு சென்ற சிறுவனை சஸ்பெண்ட் செய்த முதல்வர்.. தாயும் கடும் வாக்குவாதம்

Published:

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவன், பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கேட்க போன மாணவனின் தாயிடம் அப்பள்ளியின் முதல்வர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளி முதல்வர், வகுப்புக்கு அசைவ உணவு கொண்டு வந்ததாகக் கூறி ஐந்து வயது மாணவனை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளார். இது பற்றி கேட்கப்போன மாணவனின் தயாருக்கும், பள்ளியின் முதல்வருக்கும் ஆசிரியர் தினமான நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உளள ஹில்டன் கான்வென்ட் பள்ளி முதல்வர், மாணவன் தொடர்ந்து அசைவ உணவுகளை எடுத்து வருவது பற்றி கேட்கிறார். மேலும் அனைவரையும் அசைவ உணவை சாப்பிட வைப்பதன் மூலம் அனைவரையும் இஸ்லாத்திற்கு மாற்ற விரும்புவதாக உங்கள் குழந்தை சொல்கிறான்” என்று பள்ளியின் முதல்வர், மாணவனின் தாயிடம் கூறுகிறார். மேலும் அவர் இந்து கோவில்களை அழிக்க விரும்புவோருக்கு பாடம் நடத்த விரும்பவில்லை என்று பேசினாராம்.

அப்போது அந்த தாய், தனது குழந்தை தனது வகுப்பில் உள்ள மாணவர்களிடம் “இந்து-முஸ்லிம்” என்று பாகுபாடு பார்ப்பதாக கடந்த மூன்று மாதங்களாக புகார் கூறுகிறான் என்றார். அப்போது பள்ளி முதல்வர், மாணவனின் தாயாரிடம் , “நீங்கள் தான் அதை குழந்தைக்கு கற்பிக்கிறீர்கள்,” என்று காட்டமாக கூறுகிறார். அப்போது அந்த மாணவனின் தாயார், காலையில் இருந்து வகுப்பில் உட்கார என்னுடைய குழந்தை அனுமதிக்கப்படவில்லை என்று பெண் குற்றம் சாட்டினார். அப்போது பள்ளி முதல்வர், “நான் உங்கள் குழந்தைக்கு இனி கற்பிக்க விரும்பவில்லை, நாங்கள் மாணவனை வெளியேற்றிவிட்டோம்,” என்று கூறுகிறார்.

இப்படியாக வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அம்ரோஹி நகர முஸ்லிம் கமிட்டி மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், குறிப்பிட்ட பள்ளி முதல்வரை கைது செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அம்ரோஹாவில் நடந்த சம்பவம் தொடர்பாக கல்வி துறை விசாரணை நடத்த குழுவை அமைத்துள்ளது. மூன்று நாட்களுக்குள் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி வலியுறுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...