உத்தரப்பிரதேச பாஜக பிரமுகர் பப்பன் சிங் ரகுவன்ஷி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சமூகவலைதளங்களில் பரவிய அவதூறு வீடியோ போலி என்றும், தனது சமூக மற்றும் அரசியல் மதிப்பை கெடுக்க உருவாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
70 வயதான ரகுவன்ஷி, மகளிர் நடன நிகழ்வில் ஒரு பெண்ணை தவறாக தொட்டு முத்தமிடும் வகையில் வீடியோவில் காணப்படுகிறார் என கூறப்படுகிறது. ஆனால் அவர் இதை மறுத்து, “இது முற்றிலும் போலி வீடியோ. அது ஒரு திருமண நிகழ்ச்சியில் எனக்கு கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து படம் பிடிக்கப்பட்ட சதி,” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரகுவன்ஷி மேலும் கூறியபோது, எனக்கு எதிராக பாஜக எம்எல்ஏ கேதகி சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களின் சதி என்றும் கூறினார். நான் அங்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பதால் இந்த வீடியோ போலியாக என் மதிப்பை கெடுக்க வைரலாக்கப்பட்டது,” என்றார்.
பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்த நாராயணன் ஷுக்லா, சர்ச்சைக்குரிய வீடியோ வைரலான நிலையில் ரகுவன்ஷியை கட்சியில் இருந்து நீக்கும் உத்தரவை வழங்கினார். அதில், “அவரது நடத்தை கட்சியின் மீதான நம்பிக்கையை பாதித்துள்ளது. இந்த வகை ஒழுக்கக்கேடுகளை கட்சி பொறுக்காது,” என கூறப்பட்டுள்ளது.
ரகுவன்ஷி 1993ஆம் ஆண்டு பான்ஸ்தீஹ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இப்போது மீண்டும் அதே இடத்தில் தேர்தலில் நிற்கத் திட்டமிட்டு இருந்தார், ஆனால் அதற்குள் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட பெண் இதுகுறித்து கூறுகையில், ‘அவர் என் அப்பாவின் வயதுடையவர். அவர் ஏன் இப்படி கீழ்த்தரமான செயலில் ஈடுபட வேண்டும்? அவர் செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்,” என பதிலளித்துள்ளார்.
பபன் சிங், பாலியா மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் இதுகுறித்து எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார். அதில், பீகார் மாநிலம் நரஹனில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அந்த நேரத்தில் தன்னிடம் இரு குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அதன்பிறகு நடந்தது தனக்கு நினைவில் இல்லை என்றும், அவற்றில் மயக்க மருந்து கலந்து இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
பப்பன் சிங், பாலியா மாவட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் 1993ஆம் ஆண்டு பான்ஸ்தீஹ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
