அதிகரிக்கும் கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கான காரணங்கள் மற்றும் உணவு முறைகள்…!

Published:

ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உண்டாகிறது. முன்பு அரிதாக இருந்த இந்த கர்ப்ப கால சர்க்கரை நோயானது இப்பொழுது பல கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பலவிதமான பரிசோதனைகள் மேற்கொள்வர். தாய் மற்றும் சேயின் நலனை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த பரிசோதனைகளில் ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்டறியும் சோதனையும் ஒன்று.  கர்ப்ப காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாறுபாட்டால் இன்சுலின் தடைபடலாம் இதனால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

istockphoto 1209638103 612x612 1

கர்ப்ப கால சர்க்கரை நோய் (GDM) உண்டாக காரணங்கள்:

1. அதிக அளவு உடல் எடை கொண்டிருந்தாலோ அல்லது BMI மிக அதிகமாக இருந்தாலோ கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படலாம்.

2. கர்ப்ப காலத்தில் தொடக்க நிலையில் வயிற்றுப் பகுதியில் கொழுப்புகள் இருந்தால் கர்ப்ப கால சர்க்கரை நோய் உருவாகலாம்.

3. தாய் தந்தையருக்கு அல்லது தாய் தந்தை வழி உறவினருக்கு சர்க்கரை நோய் இருந்தால் கர்ப்ப கால சர்க்கரை நோய் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

4. 25 வயதிற்கு மேலே இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் உண்டாகும் அபாயம் இருக்கிறது.

5. முந்தைய கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தாலும் மீண்டும் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கர்ப்ப கால சர்க்கரை நோயால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்:

istockphoto 1209638091 612x612 1

குழந்தைக்கு தொப்புள் கொடி வழியே உணவுகள் கடத்தப்படும். தாய்க்கு சர்க்கரை அதிகமாக இருக்கும் பொழுது அது குழந்தையையும் பாதிக்கும்.

1. குழந்தையின் உடல் எடை மிகவும் அதிகமாக இருத்தல்.

2. பிறக்கும் பொழுது சர்க்கரை குறைவுடன் பிறத்தல்.

3. மஞ்சள் காமாலை.

4. எதிர்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாக வாய்ப்பு.

5. உயர் ரத்த அழுத்தம் உண்டாதல்.

6. சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுதல்.

கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு பின்பற்ற வேண்டிய உணவு கட்டுப்பாடு:

istockphoto 1283581366 612x612 1

1. மாவுச்சத்து அதிகம் இல்லாத காய்கறிகளான கேரட், குடைமிளகாய், ப்ரோக்கோலி, சுரைக்காய், கீரை வகைகள், பீன்ஸ் காளான் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.

2. பேரிச்சம் பழத்திற்கு பதிலாக அத்திப்பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

3. முட்டை, கோழி, சால்மன் மீன் போன்றவற்றை புரதச்சத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

4. பழுப்பு அரிசி, ஓட்ஸ், பழங்கள், நட்ஸ், உலர் திராட்சை போன்றவற்றை உண்ணலாம்.

உணவை பிரித்து உண்ண வேண்டும். ஒரு வேளைக்கு உண்ணும் உணவினை இரு வேளையாக பிரித்து உண்ணலாம்.

கர்ப்ப கால சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

கேக், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற இனிப்பு வகைகள்.

பழச்சாறுகள் ( பழங்களை கடித்து சாப்பிடவும்)

அதீத கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்.

கர்ப்பகால சர்க்கரை நோய் என்பது தற்காலிகமானது தான் பிரசவத்திற்கு பின் சர்க்கரையின் அளவு சரியாகிவிடும் என்றாலும் கர்ப்ப காலத்தில் தொடக்கத்திலிருந்து மிகவும் கவனமாய் இருத்தல் வேண்டும். கர்ப்ப கால சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை உணவிற்கு முன்பு மற்றும்  உணவு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து சர்க்கரையின் அளவை தவறாமல் பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் பிரசவத்தின் போது தேவையற்ற சிக்கல்களை தவிர்ப்பது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையையும் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாமல் காக்க முடியும்.

மேலும் உங்களுக்காக...