Monsoon Care for Children: குழந்தைகள் மழையில் நனையலாமா?

By Amaravathi

Published:

மழை பெய்தாலே ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறவர்கள், ஜாலியாக மழையில் ஆட்டம் போடுபவர்கள் என இரண்டுவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் என்றாலே தங்களது குழந்தையை மழையில் இருந்து பாதுகாப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். காரணம் குழந்தைகள் மழையில் நனைந்தால் சளி பிடித்துக்கொள்ளும், காய்ச்சல் வரும் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது.

குழந்தைகள் மழையில் நனையலாமா?

உண்மையில், குழந்தைகள் மழையில் நனைவதால் சளி பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக, மிக குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். மழைக்காலத்தில் ஏராளமான ப்ளூ கிருமிகள் உலவிக்கொண்டிருக்கும் என்றாலும், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைவு. அதேசமயம் குழந்தைகள் மழையில் நனையும் போது அருகே குப்பைகள் இருந்தாலோ அல்லது சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருந்தாலும் அங்குள்ள கிருமிகள் மூலமாக உடல்நலக் கோளாறு ஏற்படக்கூடும்.

குறிப்பாக அலர்ஜி உள்ள குழந்தைகள் அதிக நேரம் மழையில் நனைத்தால் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் கிருமிகள் பெருகுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. அப்போது அலர்ஜி ஏற்பட்ட நபர் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ அருகில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மழையில் நனையும் போது வாயில் சுவாசிக்கிறோம். இதனால் மூக்கு மூலம் வடிகட்டி அனுப்பப்படும் காற்று குறைகிறது. இதன் மூலமாகவும் எளிதாக தொற்று பரவக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

gt l8oZHoYFbUi16XR2Wo6XUsC1bRPX9

மழையில் நனைந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் விளையாடும் போதோ, பள்ளியில் இருந்து வரும் போதோ மழையில் நனைந்துவிட்டால் பதறாதீர்கள், காலம் காலமாக நம் முன்னோர்கள் கற்றுத்தந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையே போதுமானது.

  • ஈரமான ஆடைகளை கழட்டிவிட்டு, நன்றாக உலர்ந்த ஆடையை உடுத்தச் செய்யுங்கள்.
  • தலையில் ஈரம் இல்லாமல் நன்றாக துவட்டி விடுங்கள்.
  • சூடான சூப் அல்லது மஞ்சள், மிளகு கலந்த பால் போன்றவற்றை பருக கொடுங்கள்.
  • கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவச் சொல்லுங்கள். நன்றாக வளர்ந்த குழந்தை என்றால் சூடு தண்ணீரில் குளிக்க வைப்பது இன்னும் நல்லது.
  • ஒருவேளை குழந்தைகள் சாக்கடை நீரில் விளையாடி இருந்தால் காய்ச்சல் ஏற்படக்கூடும். எனவே உடல் நிலையில் சிறியளவிலான மாற்றம் ஏற்பட்டாலும் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.