பிரபல இயக்குநருக்கு கண்டிஷன் போட்ட ஜெயகாந்தன்.. தமிழில் நூல் வடிவில் திரைக்கதை உருவான முதல் திரைப்படம்

Published:

இன்று எத்தனையோ நாவல்களும், சிறுகதைகளும் திரைப்படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும், நெடுந்தொடர்களாகவும் வந்து படித்ததை அப்படியே திரையில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதற்கு சமீபத்தில் வெளியான நல்ல எடுத்துக்காட்டு பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நூலை இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்து ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்தார். இதேபோல் வெற்றிமாறன், பா.ரஞ்சித், பாலா உள்ளிட்ட இயக்குநர்களும் நாவலைத் தழுவி படம் எடுத்து ஹிட் கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் இவற்றிற்கெல்லாம் பிள்ளையார் சுழிபோட்டது பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் தான். பெரும்பாலும் பா என்ற எழுத்தினைத் தனது படங்களின் தலைப்பாக வைத்து பாசமலர், பாலும் பழமும், பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், களத்தூர் கண்ணம்மா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜாம்பவான்.

அப்போது தமிழ் இலக்கிய உலகில்  தனது கூரிய பேனா முனையால் தனக்கென தனி முத்திரை படைத்துக் கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜெயகாந்தன். இவரது படைப்புகள் ஆனந்த விகடன், சரஸ்வதி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் வெளியாகி தனக்கென தனி வாசகர் வட்டத்தினைக் கொண்டிருந்தார். அப்படி இவர் எழுத்தில் உருவான ஒரு நாவல்தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

தினமணி கதிர் இதழில் தொடர்கதையாக வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த நாவலை படமாக்க விரும்பினார் இயக்குநர் பீம்சிங். அப்போது அவரது குழுவினர் எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் சென்று நாவலைப் படமாக்குவதற்கான அனுமதியைக் கேட்க, உடனே ஜெயகாந்தன் அனுமதி கொடுத்திருக்கிறார்.

திருவிளையாடல் படத்தின் நக்கீரர் யார் தெரியுமா? இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தவரா?

மேலும் கதை திரைக்கதையாக மாறும் போது என்னென்ன மாற்றங்கள் செய்யப் போகிறீர்கள், படம் எடுக்கிறபோது எப்படி எடுக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்வதற்கும், அதில் என்ன சேர்க்கலாம், என்ன சேர்க்கக்கூடாது என்பதற்கு என் கருத்துக்களை அனுமதித்தும், இறுதியாக இந்தப் படம் நன்றாக உள்ளது என்று நான் கூறுவதற்கும் இடம் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அதன் பிரதியைக் கொடுத்தார்.

ஆனாலும் திரைக்கதை பலர் எழுதிய நிலையில் திருப்தி அடையாத பீம்சிங், ஜெயகாந்தனையே திரைக்கதை எழுதச் சொல்லி பின்னர் படமாக திரைப்படமாக எடுக்க ஆரம்பித்தார். இவ்வாறு தமிழில் ஒரு நாவலானது திரைப்படமா எடுக்கப்பட்டு பின் திரைக்கதை நூல் வடிவம் பெற்றது சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கே.

இந்தப் படத்தின் காட்சிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை, “L.S.ஷாட், E.L.C.U. எக்ஸ்ட்ரா லார்ஜ் க்ளோஸ் அப் , C.U. க்ளோசப், C.S. க்ளோஸ் ஷாட்,C.M.S. க்ளோஸ்-மிட்-ஷாட், M.S. மிட் ஷாட், M.L.S.மிட்-லாங்-ஷாட்; E.L.S. எக்ஸ்டிரா லாங் ஷாட்” என ஒவ்வொரு காட்சிக்கும், திரைக்கதையோடு பின்னி பிணைந்து வடித்திருப்பார்.

இப்படி நுணுக்கமாக சினிமாவிற்காக திரைக்கதை வடிவ நூல் வந்துள்ளது என்பது ஐயத்துக்குரியதே! இதில் ஸ்ரீகாந்த், லட்சுமி சிறப்பாக நடித்திருந்தனர். லட்சுமிக்கு ஊர்வசி விருதும் கிடைத்தது. சிறந்த திரைக்கதைக்கான விருது ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது.

மேலும் உங்களுக்காக...