ஒரு மாதம் ஓடும் என கணித்த படம்.. 25 வாரங்கள் ஓடி சில்வர் ஜூபிளி கொண்டாடிய பயணங்கள் முடிவதில்லை!

Published:

ஒரு இயக்குநருக்கு முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி அவருக்கு அடுத்தடுத்து பல வெற்றிப் பட வாய்ப்புகளைக் கொடுத்து அவரை தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் அமர வைத்த படம் தான் பயணங்கள் முடிவதில்லை. இயக்குநராக ஆர்.சுந்தர்ராஜன் அடியெடுத்து வைத்த முதல்படம். 1982-ல் வெளியான பயணங்கள் முடிவதில்லை படத்திற்கு தற்போது வயது 42. இப்படத்தில்  மோகன், பூர்ணிமா, எஸ்.வி.சேகர் ஆகியோர் நடித்திருந்தனர்.

பெரும்பாலும் முதல் பட இயக்குநர்களின் படங்களில் நடிக்க தயங்கிய அந்தக் காலகட்டத்தில் ஆர்.சுந்தர்ராஜனின் மேக்கிங், கதை சொல்லும் உக்தி போன்றவை பிடித்துப்போக அப்போது பிரபலமாக இருந்த மோகனும், பூர்ணிமாவும் இதில் இணைந்தனர்.

இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனைத்துப் பாடல்களையும் பாடியிருந்தார். பாடல்கள் அனைத்தும் வானொலியிலும், கேஸட்டுகளிலும் பட்டையைக் கிளப்ப படம் 25 நாட்கள் ஓடும் என்ற கணிப்பினை தவிடுபொடியாக்கி 25 வாரங்கள் ஓடியது. இப்படத்தினைப் பற்றி எஸ்.வி. சேகர் கூறுகையில், இப்படத்தின் முதல் நாள் காட்சியைப் பார்த்து விட்டு நானும், மோகனும் வெளியில் வந்து 4 வாரங்கள் ஓடும் என்று கணித்திருந்தோம். ஆனால் எங்களது கணிப்பினைப் பொய்யாக்கி இப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையில் ஓடி சில்வர் ஜூபிளி கொண்டாடியது என்றார்.

பிரபல இயக்குநருக்கு கண்டிஷன் போட்ட ஜெயகாந்தன்.. தமிழில் நூல் வடிவில் திரைக்கதை உருவான முதல் திரைப்படம்

இளையாராஜாவின் இசைத் திறமைக்கு இந்தப் படத்தின் பாடல்களும் ஒரு சான்று. இளைய நிலா பொழிகிறேதே, வைகறையில், சாலையோரம் சோலையொன்று, ஹே ஆத்தா, மணியோசை கேட்டு எழுந்து, தோக இளமயில், போன்ற எவர்கிரீன் பாடல்களால் மோகனுக்கு இந்தப் படம் அழியாப் புகழைக் கொடுத்தது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.சுந்தர்ராஜன் தொடர்ந்து மோகனை வைத்து மெல்லத் திறந்தது கதவு, குங்குமச் சிமிழ், சரணாலயம், நான் பாடும் பாடல், தூங்காத கண்ணின்று ஒன்று போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். பின்னர் வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் விஜயகாந்துடன் தனது பயணத்தைத் தொடங்கிய சுந்தர்ராஜன் அவருடன் அம்மன் கோவில் கிழக்காலே, எங்கிட்ட மோதாதே, காந்தி பிறந்த மண், என் ஆசை மச்சான் போன்ற படங்களை இயக்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ராஜாதி ராஜா என்ற படத்தினையும் இயக்கி வெற்றி கண்டார்.

ஆர்.சுந்தர்ராஜன் படம் எடுக்கும் விதமே தனி தானாம். ஷுட்டிங் ஸ்பாட்டில் வந்துதான் அன்றை சீன், டயலாக் போன்றவற்றை எழுதி அதன்பின்னர்தான் ஷுட்டிங் தொடங்குமாம். இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும்  நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்.

மேலும் உங்களுக்காக...