நடிகர் மாரிமுத்து தேனி மாவட்டம் வருசநாடு பகுதி அடுத்துள்ள பசுமலை தேறி என்னும் குக் கிராமத்தில் 1967 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் நாள் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்துள்ளார். இவரது கிராமத்தில் வெறும் இருபது வீடுகள் மட்டுமே இருந்துள்ளது அந்த அளவிற்கு சின்ன கிராமம் தான் அவர் சொந்த ஊர்.
அந்த கிராமத்தின் அருகில் பள்ளிக்கூடங்களோ கல்லூரிகளோ இல்லாததாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும், அந்த கிராமத்தினர் பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லாமல் விவசாயம் செய்து பிழைத்து வந்துள்ளனர். அதற்கெல்லாம் விதி விலக்காகத்தான் திரு மாரிமுத்து இருந்துள்ளார். பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் அவரது பெற்றோர்களின் தூண்டுதலின்படி தனது கிராமத்திலிருந்து ஆறு மயில் தூரத்தில் உள்ள மயிலாடும் பாறை ஜி ஆர் வரதராஜு மேல்நிலைப் பள்ளிக்கு தனது வெறும் கால்களால் நடந்து சென்று படித்துள்ளார்.
அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்த இவர் அதன்பிறகு சிவகாசியில் உள்ள அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டமும் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த மாரிமுத்துவிற்கு முதல் மரியாதை என்ற திரைப்படம் அவர் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் முதல் மரியாதை படத்தை பார்த்த இவருக்கு அந்த படத்தின் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்பட்டு திரும்பத் திரும்ப அந்த படத்தை பார்த்துள்ளார். வீட்டிற்கு வந்த பிறகும் கூட அந்த படத்தின் தாக்கம் அவரை பல நாட்கள் தூங்கவிடாமலே செய்திருக்கிறது. நாமும் இயக்குனராகி முதல் மரியாதை போன்ற ஒரு படத்தை எடுத்து தமிழ் திரை உலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு 1990 ஆம் ஆண்டு தனது வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தார்.
சென்னைக்கு வந்தால் இயக்குனராகி பெரிய ஆளாகிவிடலாம் என்ற நினைப்பில் இருந்த இவருக்கு சென்னை மாநகரம் முதலில் வலியையும், வேதனையையும் தான் கொடுத்தது. சென்னையில் வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்த இவருக்கு ஒரு ஹோட்டலில் சாதாரண கூலி வேலை கிடைத்துள்ளது.
அப்போது கவிப்பேரரசு வைரமுத்து அந்த ஹோட்டலில் உணவருந்த வந்த போது இருவருக்கும் இடையில் இலக்கிய உரையாடல்கள் நடை பெற்று இருவரும் நண்பர்களாக மாறி, வைரமுத்துவின் உதவி எழுத்தாளராக சினிமாவில் நுழைந்தார் மாரிமுத்து.
அதன் பிறகு ராஜ்கிரனுடன் நட்பு ஏற்பட்டு அவரின் இயக்கத்தில் அரண்மனை கிளி, எல்லாமே என் ராஜா தான் படங்களில் யூதாவி இயக்குனராக சினிமாவில் பணிபுரியத்துவங்கினார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் வசந்த், சீமான், எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். சிம்புவின் மன்மதன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார்.
உதவி இயக்குனராக இருந்த மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் என்னும் படங்களை இயக்கி தனது இயக்குனர் ஆசையை தீர்த்துக்கொண்டார். இவர் இயக்கிய படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில் 2010 முதல் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கினார்.
2011 ஆண்டு வெளிவந்த இயக்குனர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஊழல் செய்யும் காவல் அதிகாரியாக சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நிமிர்ந்து நில், மருது, கொம்பன் போன்ற பல படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அகிலன் என்கிற ஒரு மகனும், ஐஸ்வர்யா என்கிற ஒரு மகளும் உள்ளனர். தன் மனைவி பற்றி இவர் சொல்லும்போது 1994 இல் எனக்கு கல்யாணம் நடந்தது.எத்தனை வருடம் என்னுடன் என் மனைவி குடும்பம் நடத்துவதே சாதனைதான் நான் அன்பான கணவர் கிடையாது. சில பேர் மனைவியை குழந்தை மாதிரி பார்த்துக்கொள்வார்கள். பூ வாங்கி கொடுப்பார்கள், பொட்டு வைத்து விடுவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை.
ஆனாலும் அவருக்கு என் மீது அளவுகடந்த பாசம் என்பது எப்போதுமே உள்ளது. இவளை தவிர வேறு யாரையாவது நான் திருமணம் செய்து இருந்தால் நிச்சயம் நான் சினிமாவில் தோற்று இருப்பேன். மனைவி கொடுக்கும் எனர்ஜி தான் கணவருடைய வெற்றிக்கு காரணம் என்னுடைய மனைவி கொடுத்த உத்வேகத்தால் தான் நான் இன்று வெற்றி அடைந்திருக்கிறேன் என்று தன் மனைவி குறித்து பெருமையாக கூறினார்.
மாரிமுத்துவின் ஆசை.. நெகிழ்ச்சியுடன் நிறைவேற்றிய அஜித்!
வெள்ளி திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த இவர் சின்னத்திரையில் ஆதி குணசேகரன் ஆக எதிர்நீச்சல் என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமான நடிகராக மாறினார். அந்த நாடகத்தில் இவர் பேசும் அட எம்மா ஏய் என்ற வசனம் பட்டி தொட்டி எங்கும் ஒளித்து இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது.
அதேபோல சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரும் பாராட்டை பெற்று இருந்தது. நடித்து சம்பாதித்து நல்ல கார் ஒன்றை வாங்கியுள்ள இவர் அது பற்றி சொல்லும் போது, நான் ரொம்ப கஷ்டப்பட்ட சமயத்தில் ஹோட்டலில் வேலை பார்த்தேன். அந்த ஹோட்டல் முன்னாடி இப்ப என்னோட சொகுசு காரை நிப்பாட்டி ரசித்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது சினிமாவிலும் எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். சென்னையில் சமீபத்தில் தான் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி கிரகப்பிரவேசம் செய்து அதில் குடியேறியும் இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள் விடியற்காலையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேச டப்பிங் தியேட்டருக்கு வந்திருக்கிறார். அவருடன் நடிகர் கமலேஷ் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள்.
டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது நெஞ்சு வலிப்பதாக திரு மாரிமுத்து சொல்ல அருகில் இருந்த கமலேஷ் உள்ளிட்டோர் வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அந்த தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரிமுத்துவின் உயிர் மாரடைப்பால் ஏற்கனவே பிரிந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் திரை உலகினர் மட்டுமல்லாது சீரியல் பார்க்கும் தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பத் தலைவிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.