விஜய்யோட போக்கிரி படத்துல நடிச்சது நடிகர் அசோகனோட மகனா.. இது தெரியாம போச்சே..

Published:

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் ஹீரோக்களாக பலர் ஜொலித்தாலும் இவர்களை எதிர்த்து சண்டை போட்ட வில்லன்களும் கூட அதிகம் பெயர் எடுத்திருந்தார்கள். அந்த வகையில், நம்பியார் உள்ளிட்ட பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம். அதில் முக்கியமான ஒரு நடிகர் தான் அசோகன். அவர் தனித்துவமான நடிப்பில் வல்லவர் என்பது பலருக்கும் தெரிந்ததே.

இந்த நிலையில் அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் என்பவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கு தெரியாத ஆச்சரியமான தகவலாகும். கடந்த 1965 ஆம் ஆண்டு சென்னையில் வின்சென்ட் அசோகன் பிறந்தார்.  இவர் சிறு வயதிலேயே தனது தந்தையுடன் படப்பிடிப்புக்கு சென்றதால் அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அப்பாவை போலவே வில்லனாக கலக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்தார்.

இந்த நிலையில் தான் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ’ஏய்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக அவர் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் வில்லனாக நடித்தார். சத்யராஜ் நடித்த 6.2, சிம்பு நடித்த தொட்டி ஜெயா, விஜய் நடித்த போக்கிரி, அஜித் நடித்த ஆழ்வார், அர்ஜுன் நடித்த துரை உள்பட பல படங்களில் நடித்தார்.

vincent1

மேலும்  தொட்டால் தொடரும், கில்லாடி, நெருப்புடா, துப்பறிவாளன், இரும்புத்திரை, டிக் டிக் டிக், வடசென்னை உட்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார்.

மேலும் கடமையை செய் மற்றும் கேப்டன் படத்தில் நடித்த அவர், கடந்த ஆண்டு வெளியான பரம்பொருள் உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இப்போதும் அவர் சில படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

திரை உலகில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் வின்சென்ட் அசோகன் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான நம்பிக்கை, மாயா உள்ளிட்ட தொடரிலும் நடித்துள்ளார். மேலும் குருதி காலம் என்ற தொடரில் அவர் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி ஜீ டிவியில் ஒளிபரப்பான சிங்க பெண்ணே என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார் வின்சென்ட் அசோகன்.

vincent

நடிகர் வின்சென்ட் அசோகன் ஒரு முறை அளித்த பேட்டி ஒன்றில், ‘என்னை சினிமாவுக்கு வருவதை விட நன்றாக படித்து நல்ல பதவிக்கு வரவேண்டும் என்று தான் எனது தந்தை விரும்பினார். ஆனால் நான் 12 வது படிக்கும் போது அவர் இறந்து விட்டதையடுத்து வேறு வழியில்லாமல் நான் சினிமாவில் இணைந்தேன். ஆனால் அதே நேரத்தில் அவரது விருப்பப்படி நான் பட்டப்படிப்பையும் முடித்தேன்’ என கூறி இருந்தார்.

நடிகர் வின்சென்ட் அசோகன் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த  2008 ஆம் ஆண்டு ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ’சில நேரங்களில்’ என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நவ்யா நாயர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...