மக்கள் திலகம் எம்ஜிஆரால் ஏராளமான திரையுலகினர் பயன்பெற்றார்கள் என்பதுதான் பல செய்திகளாக வெளிவந்தன. ஆனால் சில வதந்திகளாக எம்ஜிஆரால் சந்திரபாபு மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அதேபோல் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த நடிகர் அசோகன் மிகப்பெரிய நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அசோகனுக்கு வந்த சிக்கலை எம் ஜி ஆர் எப்படி தீர்த்தார் என்பது பலரும் அறியாத உண்மை.
தமிழ் திரையுலகின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் அசோகன். புதுமையான உடல் மொழி, வசன உச்சரிப்பு ஆகியவற்றுக்கு சொந்தக்காரர் அசோகன். அவரது நடிப்பிற்காகவே ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் திரையுலகில் இருந்தது.
தடைகளை தகர்த்து சாதனை செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’: எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளம்..!

திருச்சியை சேர்ந்த அசோகனின் நிஜ பெயர் அந்தோணி. இவர் சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்தவர். நடிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். இருப்பினும் அவர் இன்னொரு பக்கம் தனது கல்லூரி படிப்பை முடித்தார். திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் அவருக்கு இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் அறிமுகம் கிடைத்தது.
அதை வைத்து தான் அவர் அவ்வையார் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார். அந்த கேரக்டரில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை அடுத்து கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தில் கலெக்டர் ஆஷ் என்ற கேரக்டரில் நடித்தார். அந்த கேரக்டர் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அதன் பிறகு தான் அசோகனுக்கு வில்லன் மற்றும் குணச்சித்திர வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குறிப்பாக வல்லவனுக்கு வல்லவன், கர்ணன் ஆகிய படங்களை சொல்லலாம். எம்.ஜி.ஆர் மற்றும் அசோகன் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். எம்ஜிஆரின் பல படங்களில் அவர் வில்லனாக நடித்துள்ளார். அரசிளங்குமரி, தாய் சொல்லை தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும், பெரிய இடத்துப் பெண், ஆனந்த ஜோதி, பணக்கார குடும்பம், நீதிக்குப் பின் பாசம், காஞ்சித்தலைவன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தார். எம்ஜிஆருக்கு இணையாக அவரது கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும்.

அதிலும் உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தில் அசோகன் மிக அபாரமாக வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார். இந்த நிலையில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த நேற்று இன்று நாளை என்ற திரைப்படத்தை அசோகன் தயாரித்தார்.
புது வசந்தம் படத்திற்கு முன்னரே வந்த ஒரு காவிய திரைப்படம்.. மரபை கலைத்த ‘பாலைவன சோலை’
இந்த படத்தை தயாரிக்கும் போது அவர் வசதியாக இருந்தாலும் படத்தின் செலவு அதிகமாக வந்து கொண்டே இருந்ததால் அவர் ஒரு கட்டத்தில் திணறியதாகவும் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் அசோகனுக்கு பைனான்ஸ் செய்தவர், பைனான்ஸ் செய்வதை நிறுத்தி விட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் எம்ஜிஆர், மஞ்சுளா, லதா உள்பட அனைவருக்கும் சம்பள பாக்கி இருந்ததாகவும், படத்தை தொடர முடியாத நிலை இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அசோகனை எம்ஜிஆர் தனது வீட்டுக்கு அழைத்து யார் யாருக்கு எவ்வளவு சம்பள பாக்கி உள்ளது என்ற முழு விபரத்தையும் வாங்கி அதற்கான முழு தொகையையும் எம்ஜிஆர் தான் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
எம்ஜிஆரிடம் இருந்து பணத்தை வாங்கிய அசோகன் தன்னுடைய வீட்டிற்கு கூட செல்லாமல் யார் யாருக்கு சம்பள பாக்கி இருந்ததோ அவர்களுடைய வீட்டுக்கே சென்று கொடுத்ததாகவும் அதன் பிறகு தான் அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த படத்திற்கு தன்னுடைய சம்பள பாக்கியை எம்ஜிஆர் கடைசிவரை வாங்கவில்லை என்றும் அந்த காலத்திலேயே அது லட்சக்கணக்கான ரூபாய் என்றும் கூறப்படுகிறது. ஒரு வழியாக இந்த படம் 1974ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பத்திரிகைகள் கொண்டாடின. ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு படம் என்று அனைவரும் இந்த படத்திற்கு விமர்சனம் தந்தனர்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அசோகன் இந்த படத்திற்காக வாங்கிய அனைத்து கடன்களையும் தீர்த்ததோடு ஒரு மிகப்பெரிய தொகை அவருக்கு லாபமாகவும் கிடைத்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் மிகவும் தத்தளித்துக் கொண்டிருந்த அசோகனை கரையேற்றியது எம்ஜிஆர் என்பதுதான் உண்மை. ஆனால் எம்ஜிஆர் நடித்த படத்தை எடுத்ததால் தான் அசோகன் நஷ்டம் அடைந்தார் என்று பல ஆண்டுகளாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
அவள் ஒரு தொடர்கதை படத்தை மீண்டும் இயக்கினாரா கே.பாலசந்தர்? மனதில் உறுதி வேண்டும் பெற்ற விமர்சனம்..!
நடிகர் அசோகன், சரஸ்வதி என்ற மேரி ஞானம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய மகன்களில் ஒருவரான வின்சென்ட் அசோகன் இன்றும் திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
