‘மைதிலி என்னை காதலி’ படம் ரிலீஸின்போது திடீரென டி.ராஜேந்தருக்கு இரண்டு லட்ச ரூபாய் தேவைப்பட்டதாகவும், அப்போது டி.ராஜேந்தருக்கு தயாரிப்பாளர் தாணு உதவி செய்ததாகவும் அந்த கடனுக்காகதான் ‘கூலிக்காரன்’ படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்ததாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி ‘கூலிக்காரன்’ படத்திற்காக வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதியை படம் முடிந்த பிறகு விஜயகாந்த் திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுவதுதான் ஒரு ஆச்சரியமான தகவல்.
விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கூலிக்காரன்’. ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரூபிணி நாயகியாக அறிமுகமானார். வில்லனாக ஜெய்சங்கர் மற்றும் ராதாரவி நடித்திருந்தனர்.
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘காலியா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘கூலிக்காரன்’. ரஜினிக்கு எப்படி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் தாணு கொடுத்தாரோ, அதேபோல் புரட்சிக் கலைஞர் என்ற பட்டத்தை தயாரிப்பாளர் தாணு விஜயகாந்துக்கு கொடுத்தார். இந்த படத்திற்கு பிறகு விஜயகாந்த் நடித்த அனைத்து படங்களிலும் புரட்சி கலைஞர் என்று டைட்டிலில் போடப்பட்டது.

இந்த படத்தில் முதலில் ரஜினி நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் அவரே இந்த படத்தை விஜயகாந்தை வைத்து எடுங்கள், இந்த கேரக்டருக்கு அவர் சரியாக இருப்பார் என்று பரிந்துரை செய்ததால் தான் விஜயகாந்தை பார்க்க தாணு சென்றார். அப்போது அவரது மேனேஜர் ராவுத்தர் அதற்கு முன் வெளியான ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட மூன்று மடங்கு கேட்டதாக கூறப்பட்டது. முதலில் அதிர்ச்சி அடைந்த தாணு அதன்பின் அந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு ‘கூலிக்காரன்’ படப்பிடிப்பு மளமளவென்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென இயக்குனர் ராஜசேகர் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தியதாகவும் தெரிகிறது. இதனால் தாணு அதிர்ச்சி அடைந்தாலும் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்தார்.
ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!

ஒரு வழியாக இந்த படம் முடிவு பெற்று ரிலீஸானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்த பின்னர் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படம் வெற்றி பெற்றதை பார்த்தவுடன் விஜயகாந்த் ஒருநாள் தாணுவை அழைத்து, ‘உங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டாம் என்பதற்காகத் தான் எனது மேனேஜர் ராவுத்தர் மூன்று மடங்கு சம்பளம் கூறினார், ஆனால் நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் இந்த படத்தை எடுத்ததை பார்த்தபோது எனக்கு உங்கள் மீது மரியாதை வந்தது, அதனால் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் திரும்பி வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று மனிதாபிமானத்துடன் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி தொடர்ந்து உங்களுக்கு நான் அடுத்தடுத்து படம் பண்ணுகிறேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். அதன்படியேதான் விஜயகாந்த் அடுத்தடுத்து தாணு தயாரித்த ‘நல்லவன்’, ‘தெருப்பாடகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அந்த காலத்தில் ரஜினிகாந்த் படத்துக்கு மட்டுமே ஒரு கோடிக்கு மேல் வியாபாரமாகும் நிலையில் விஜயகாந்துக்கு முதல் முதலாக ஒரு கோடி பிசினஸை தந்த படம்தான் ‘கூலிக்காரன்’. இந்த நிலையில் கூலிக்காரன் நூறாவது நாள் விழாவை கலைஞர் கருணாநிதியை வைத்து தாணு நடத்தினார். எம்ஜிஆர் அப்போது முதலமைச்சராக இருந்தபோதிலும் தமிழ் மேல் இருந்த அபிமானம் காரணமாக கருணாநிதியை வைத்து இந்த விழாவை நடத்தியதாக தாணு ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
