சர்வதேச அளவில் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு கிடைத்த கவுரவம்.. கதை முக்கியம் பிகிலு..

Published:

நடிகர் விஜய் சேதுபதி இதுவரை 50 திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படமாக அமையவில்லை என்பது தான் உண்மை. ஆனால், இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவில் முக்கியமான மைல்கல் தான். பண்ணையாரும் பத்மினியும், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் வேதா, 96, சூது கவ்வும், பீட்சா, நானும் ரவுடி தான், தர்மதுரை என வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது.

அது மட்டுமில்லாமல், விஜய் சேதுபதி படத்திற்கு படம் தனது கதாபாத்திரங்களிலும் நிறைய மாறுபட்டு இருக்கும் வகையில் தான் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50 வது திரைப்படமான மகாராஜாவும் வெளியாகி இருந்தது.

குரங்கு பொம்மை என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன், 8 ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது திரைப்படமான மகாராஜாவை உருவாக்கி இருந்தார். முதல் படத்தில் திரைக்கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருந்தாரோ அதை விட மகாராஜா படத்திற்காக ஒரு படி மேலே சென்றிருந்தார் நித்திலன்.

படத்தின் திரைக்கதை கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட விறுவிறுப்பை குறைக்காமல் இருக்க, 50 வது திரைப்படம் என்ற மைல்கல்லைத் தாண்டி விஜய் சேதுபதிக்கு மற்றொரு அடையாளமாக மகாராஜா மாறி இருந்தது. பாசமிகு தந்தையாக, ஒரு சலூன் நடத்தும் சாதாரண மனிதனின் வாழ்க்கையை வேதனையுடன் விவரித்ததற்காகவே மிகப் பெரிய அளவில் இந்த திரைப்படம் பேசப்பட்டது.

திரை அரங்கில் வெற்றிகாரமாக ஓடிய மகாராஜா, ஓடிடி வெளியான பின்னர் அதை விட அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு காரணம், திரை அரங்கில் வெளியான போது இந்திய அளவில் மட்டும் தான் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது. ஆனால், ஓடிடியில் வெளியான பின்னர் சர்வதேச அளவில் பல நாடுகளை சேர்ந்தவர்களும் மகாராஜா படத்தை பாராட்டியதால் நெட்பிளிக்சில் இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

இந்த நிலையில் தான் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மிக முக்கியமான சாதனை ஒன்றை மகாராஜா திரைப்படம் தற்போது படைத்துள்ளது. இந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களை கடந்த இந்திய திரைப்படமாகவும் மகாராஜா மாறி உள்ளது.

இதற்கு முன்பு ஹிந்தி திரைப்படங்களான Crew மற்றும் லப்பாட்டா லேடீஸ் திரைப்படங்கள் ஏறக்குறைய 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்த நிலையில் தற்போது மகாராஜா 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தமிழ் சினிமா மூலம் தடம் பதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...